ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 7 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. ராக்கெட்
|ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 7 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் நேற்று விண்ணில் பாய்ந்தது. ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலைவர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
ஸ்ரீஹரிகோட்டா,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பல்வேறு பணிகளுக்காக செயற்கைகோள்களை வடிவமைத்து வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது.
வணிக ரீதியிலான செயற்கைகோள்கள்
நம் நாட்டு பயன்பாட்டுக்கான செயற்கைகோள்களுடன், வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைகோள்களையும் இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது.
குறிப்பாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் வணிக கிளையான 'நியு ஸ்பேஸ் இந்தியா லிமிடெட்' (என்.எஸ்.ஐ.எல்) வணிக ரீதியிலான செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து வருகிறது.
சிங்கப்பூரின்7 செயற்கைகோள்கள்
அதன்படி சிங்கப்பூருக்கு சொந்தமான 'டி.எஸ்.-சாட்' எனும் புவி கண்காணிப்பு செயற்கைகோளை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோவின் என்.எஸ்.ஐ.எல். நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
360 கிலோ எடை கொண்ட 'டி.எஸ்.- சாட்' 'சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார்' என்ற தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடியது. அதாவது, பகல், இரவு என அனைத்து காலங்களிலும் துல்லியமான படங்களை எடுத்து வழங்கும்.
இதனுடன் பல்வேறு விதமான தொழில்நுட்ப ஆய்வுகளுக்காக 'வெலாக்ஸ்-ஏ.எம்.' (23 கிலோ), 'ஆர்கேட்' (24 கிலோ), 'ஸ்கூப்'-2(4கி), 'நியூலயன்' (3கி), 'கலாசியா'(3.5கி), 'ஆர்ப்'-12 'ஸ்டிரைடர்'(13கி) ஆகிய 6 செயற்கைகோள்களையும் விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டது.
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது
அதன்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து, பிரதான செயற்கைகோளான 'டி.எஸ்.-சாட்' உள்பட 7 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்தன.
அதை தொடர்ந்து இறுதிக்கட்ட பணிகள் முடிந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதற்கான 25½ மணி நேர கவுண்ட்டவுன் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) காலை தொடங்கியது.
இந்த நிலையில் கவுண்ட்டவுனை முடித்து கொண்டு, நேற்று காலை 6.30 மணிக்கு தீ பிழம்பை கக்கியவாறு பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தம்
ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததும், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கூடி இருந்த விஞ்ஞானிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் எஸ்.சோம்நாத், இஸ்ரோ விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் மற்றும் ஊழியர்களுடன் கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டார்.
அதேபோல் ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதை பார்வையிட பார்வையாளர்கள் மாடத்தில் திரண்டிருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட 10 ஆயிரம் பேர் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதனிடையே ராக்கெட் புறப்பட்ட 21 நிமிடம் 19 வினாடியில் திட்டமிட்டபடி பூமியில் இருந்து 536 கி.மீ. தொலைவில் 'டி.எஸ்.- சாட்' செயற்கைகோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. அதேபோல் மற்ற 6 செயற்கைகோள்களும் புவி வட்டப்பாதையில்வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டன.
விஞ்ஞானிகள் பெருமிதம்
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-
இந்த ஆண்டு இஸ்ரோவால் ஏவப்பட்ட 6-வது ராக்கெட் இதுவாகும். இந்த ராக்கெட் பி.எஸ்.எல்.வி. ரகத்தில் 58-வது ராக்கெட்டாகும். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 93-வது ராக்கெட் என்ற பெருமையையும் இந்த ராக்கெட் பெறுகிறது.
சிங்கப்பூரின் 'டி.எஸ்.- சாட்' செயற்கைகோள் வெற்றிகரமாக புவிவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. இதனுடைய ஆயுட்காலம் 5 ஆண்டுகளாகும். விவசாயம், வனவளம், புவிசூழல், கடற்கரையோர பகுதிகள், உள்நாட்டு நீராதாரங்கள் போன்றவற்றின் தன்மைகள் குறித்த தகவல்களை இந்த செயற்கைகோள் படம் பிடித்து அனுப்பும். இதில் உள்ள அதிநவீன படம் பிடிக்கும் கருவி பல கோணங்களில் படம் பிடித்து அனுப்பும் சிறப்புத்தன்மை கொண்டது.
ராக்கெட்டில் அனுப்பப்பட்ட அனைத்து செயற்கைகோள்களையும் வெற்றிகரமாக நிலை நிறுத்தியதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினர்.
பாராட்டு
பி.எஸ்.எல்.வி. வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளார்கள்.