நாளை மறுநாள் விண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்
|ராக்கெட் ஏவுவதற்கான கவுண்ட்டவுன் நாளை தொடங்கப்பட உள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டை வருகிற 1-ந்தேதி (நாளை மறுநாள்) காலை 9.10 மணிக்கு விண்ணில் செலுத்துகிறது. இதில், 5 ஆண்டுகள் ஆயுட்காலத்தை கொண்ட 'எக்ஸ்போசாட்' என்ற செயற்கைகோள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் 500-700 கிலோ மீட்டர் வட்டமான பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.
இந்த செயற்கைகோள், எக்ஸ்ரே மூலங்களின் தற்காலிக நிலை, நிறமாலை போன்ற அறிவியல் ஆய்வுகளையும், விண்வெளியில் உள்ள தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான 'நெபுலா' உள்ளிட்டவற்றையும் ஆராய உள்ளது.
அத்துடன், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாணவிகள் 'வெசாட்' என்ற செயற்கைகோளை வடிவமைத்துள்ளனர். இது, விண்வெளி மற்றும் பூமியின் மேற்பரப்பில் உள்ள புறஊதா கதிர்கள் மற்றும் கேரளாவில் வெப்பநிலை மற்றும் காலநிலை மாற்ற நிகழ்வுகளில் அவற்றின் தாக்கத்தை அளவிட இருக்கிறது. பெண்களின் மேற்பார்வையில் முழுமையாக வடிவமைக்கப்பட்ட நாட்டின் முதல் செயற்கைகோள் என்ற பெருமையை இந்த செயற்கைகோள் பெறுகிறது. இந்த ராக்கெட்டில் மாணவிகள் வடிவமைத்த 'வெசாட்' என்ற செயற்கைகோளும், வெளிநாடுகளை சேர்ந்த மேலும் 10 செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான இறுதிக்கட்டப்பணியான கவுண்ட்டவுன் வருகிற 31-ந்தேதி(நாளை) தொடங்கப்பட உள்ளது.
ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என 10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்வையிடும் வகையில் பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டு உள்ளது. நேரில் செல்ல விரும்பும் பார்வையாளர்கள் https://lvg.shar.gov.in என்ற இணையதள முகவரியில் பெயர்களை முன்பதிவு செய்து, அதற்கான அனுமதி சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.