நாட்டுக்காக ஆர்வமுடன் பணியாற்ற விரும்புவோருக்கு வேலை, ஓய்வூதியம் வழங்க வேண்டும்: பஞ்சாப் முதல்-மந்திரி
|நாட்டுக்காக ஆர்வமுடன் பணியாற்ற விரும்பும் நபர்களுக்கு வேலையும், ஓய்வூதியமும் வழங்க வேண்டும் என அக்னிபத் திட்டம் பற்றி பஞ்சாப் முதல்-மந்திரி கூறியுள்ளார்.
சண்டிகர்,
இந்தியாவில் ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள்சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் பலர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் வன்முறையும் வெடித்து உள்ளது. கல் வீச்சு, தீ வைப்பு சம்பவங்களும் பரவலாக நடந்துள்ளன.
பீகாரின் சம்பரான் மாவட்டத்தின் பச்சிம் பகுதியில் துணை முதல்-மந்திரி ரேணு தேவியின் வீடு மீது நேற்று கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி சென்றது. இதேபோன்று, பீகாரில் பா.ஜ.க. தலைவர் சஞ்ஜய் ஜெய்ஸ்வாலின் இல்லம் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. பீகாரில் ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டரில் இருந்து ரூ.3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் இத்திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து உள்ள நிலையில், பஞ்சாப்பில் ஆளும் ஆம் ஆத்மி அரசின் முதல்-மந்திரி பகவந்த் மான் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, இளைஞர்களிடையே கோபம் ஏற்பட்டு உள்ளது.
இந்த முடிவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி பிரதமருக்கு நான் கடிதம் எழுத உள்ளேன். நாட்டுக்காக ஆர்வமுடன் பணியாற்ற விரும்புகிறவர்களுக்கு, சேவையாற்ற வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதன்பின்னர் அவர்களுக்கு ஓய்வூதியமும் வழங்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.