மின்இணைப்பு வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம்; பெஸ்காம் என்ஜினீயர் கைது
|ஆழ்துளை கிணறுக்கு மின்இணைப்பு வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெஸ்காம் என்ஜினீயரை கைது செய்து ஊழல் தடுப்புபடை நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோலார் தங்கவயல்;
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா தாலுகா ஜெங்கம்மகோட்டை கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட அங்கதட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்திருக்கிறார். ஆழ்துளை கிணறுக்கு மின்இணைப்பு கேட்டு அவர் பெஸ்காம் நிறுவனத்தில் விண்ணப்பித்திருந்தார்.
ஆனால் அதற்கு அதிகாரிகள் மின்இணைப்பு கொடுக்காமல் இருந்துள்ளனர். இதுகுறித்து அவர் மின்வாரியத்தில் என்ஜினீயராக பணியாற்றும் சீனிவாஸ் என்பவரை சந்தித்து கேட்டு உள்ளார். அப்போது அவர் மின்இணைப்பு கொடுக்க வேண்டும் என்றால் ரூ.30 ஆயிரம் லஞ்சம் கொடுக்கவேண்டும் என கூறியுள்ளார்.
இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த விவசாயி, ஊழல் தடுப்புபடை போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் ஊழல் தடுப்புபடை போலீசார், அவரிடம் ரசாயன ெபாடி தடவிய ரூ.20 ஆயிரத்தை கொடுத்து அதனை கொடுக்கும்படி சில அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
அதன்படி விவசாயி, என்ஜினீயரை சந்தித்து ரசாயன பொடி தடவிய ரூ.20 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அந்த பணத்தை சீனிவாஸ் வாங்கியபோது, அங்கு மறைந்து இருந்த ஊழல் தடுப்பு படை போலீசார், என்ஜினீயர் சீனிவாசை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.20 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். கைதான அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.