ஜி20 கூட்டுப்பிரகடனம் 'இந்தியாவின் பெருமைக்குரிய தருணம்' - சசிதரூர் புகழாரம்
|ஜி20 நாடுகளின் கூட்டுப்பிரகடனம் இந்தியாவின் பெருமைக்குரிய தருணம் என சசிதரூர் தெரிவித்துள்ளார்.
டெல்லி,
டெல்லியில் ஜி20 உச்சிமாநாடு நேற்று தொடங்கியது. இந்தியா தலைமையிலான இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ஜப்பான், வங்காளதேசம் என பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். நேற்றைய முதல் நாள் உச்சிமாநாட்டில் பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டன.
மேலும், மாநாட்டின் முதல் நாளான நேற்றைய நிகழ்வுகளின் முக்கிய அம்சமாக கூட்டுப்பிரகடனம் வெளியிடப்பட்டது. கூட்டுப்பிரகடனத்தை ஜி20 கூட்டமைப்பின் அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டன.
கூட்டுப்பிரகடனத்தில் உக்ரைன் - ரஷியா போர் குறித்தும் கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன. அதேவேளை, போர் தொடர்பாக வெளியிடப்பட்ட கூட்டுப்பிரகடனத்தில் ரஷியாவுக்கு நேரடியாக கண்டனம் தெரிவிக்கவில்லை. ரஷியா - உக்ரைன் போர் குறித்து மிகவும் மென்மையான கருத்துக்களே இடம்பெற்றிருந்தன.
கூட்டுப்பிரகடனத்தில் ரஷியாவின் பெயர் இடம்பெறவில்லை. உக்ரைன் போர் விவகாரத்தில் ஜி20 நாடுகள் ஒன்றாக கூட்டுப்பிரகடனம் வெளியிட்டு, அதில் ரஷியாவிற்கு கண்டனம் தெரிவிக்காதது இதுவே முதல் முறையாகும். இந்த விவகாரத்தில் ஜி20 நாடுகளை ஒரே கருத்தின் கீழ் கொண்டுவர இந்தியா எடுத்த முயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.
இதனிடையே, ஜி20 கூட்டமைப்பிற்கான இந்தியாவின் பிரதிநிதி அமிதாப் காந்த் தலைமையிலான இந்திய தூதரக குழுவின் தீவிர முயற்சியால் ஜி20 நாடுகளின் கூட்டுப்பிரகடனம் சாத்தியமாகியுள்ளது.
மிகவும் சிக்கலான புவிசார் அரசியல் விவகாரத்தில் (உக்ரைன் - ரஷியா போர் விவகாரத்தில்) ஜி20 மாநாட்டில் கூட்டுப்பிரகடனத்தை வெளியிட இடைவிடாது 200 மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்று, 300 இரு தரப்பு கூட்டங்கள் கூட்டப்பட்டு இறுதியில் கூட்டுப்பிரகடனம் முடிவு எட்டப்பட்டது. ரஷியா, சீனாவுடனான நேற்று இரவு தான் பேச்சுவார்த்தை நடத்தினோம். இறுதி பிரகடனம் தயாராகிவிட்டது' என ஜி20 கூட்டமைப்பிற்கான இந்திய பிரதிநிதி அமிதாப் காந்த் கூறினார்.
இந்நிலையில், ஜி20 நாடுகளின் கூட்டுப்பிரகடனம் இந்தியாவின் பெருமைக்குரிய தருணம் என காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டர் (எக்ஸ்) பக்கத்தில் அமிதாப் காந்தை டேக் செய்த சசிதரூர், மிகவும் சிறப்பாக செயல்பட்டீர்கள் அமிதாப் காந்த். நீங்கள் இந்திய நிர்வாக சேவை (ஐஏஎஸ்) துறையை தேர்வு செய்தபோது ஒரு உயர் ராஜதந்திரியை இந்திய வெளியுறவு சேவை இழந்துவிட்டதாக நினைத்தேன். ஜி20 நாடுகளின் கூட்டுப்பிரகடனம் குறித்து ரஷியா, சீனாவுடனான நேற்று இரவு தான் பேச்சுவார்த்தை நடத்தினோம். இறுதி பிரகடனம் தயாராகிவிட்டது என அமிதாப் காந்த் கூறியிருந்தார். ஜி20 நாடுகளின் கூட்டுப்பிரகடனம் இந்தியாவின் பெருமைக்குரிய தருணம்' என பதிவிட்டுள்ளார்.
ஜி20 நாடுகளின் கூட்டுப்பிரகடனத்தில் உக்ரைன் போர் குறித்து இடம்பெற்ற கருத்துக்கள் பின்வருமாறு:-
உக்ரைன் போரை பொறுத்தவரை, இந்தோனேசிய தலைநகர் பாலியில் (கடந்த ஆண்டு நடந்த ஜி20 மாநாடு) நடந்த விவாதத்தை நினைவுகூருகிறோம். அதாவது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட நமது தேசிய நிலைப்பாடுகள் மற்றும் தீர்மானங்களை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
அனைத்து நாடுகளும் ஐ.நா.வின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு இணங்க செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.
அனைத்து நாடுகளும் எந்தவொரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை அல்லது அரசியல் சுதந்திரத்திற்கு எதிராக ஆக்கிரமித்தலை ஏற்படுத்தவோ அல்லது படைகளை பயன்படுத்துவதையோ தவிர்க்க வேண்டும்.
அணு ஆயுதங்களின் பயன்பாடு அல்லது அச்சுறுத்தல் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த சகாப்தம் போருக்கானது அல்ல' என தெரிவிக்கப்பட்டிருந்தது.