< Back
தேசிய செய்திகள்
பிரிஜ் பூஷனை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்
தேசிய செய்திகள்

பிரிஜ் பூஷனை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்

தினத்தந்தி
|
12 May 2023 1:48 AM IST

பிரிஜ் பூஷனை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்தினர்.

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த பாலியல் புகார் குறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பிரிஜ் பூஷனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 23-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பிரிஜ் பூஷனை கைது செய்ய காலம் தாழ்த்துவதை கண்டித்து கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடைபெறும் என்று அறிவித்து இருந்தனர்.

இதன்படி நேற்று மல்யுத்த வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகத், சத்யவாந்த் காடியன் உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் நெற்றி, கையில் கருப்பு பட்டை அணிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். பஞ்சாப், அரியானா, மராட்டியம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த பெண்கள் மற்றும் இளைஞர் அமைப்பினர் நேற்று மல்யுத்த வீரர்களை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்