'விஸ்ட்ரான்' நிறுவன ஊழியர்கள் மீண்டும் போராட்டம்
|கோலாரில் உள்ள ‘விஸ்ட்ரான்’ செல்போன் நிறுவன ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
கோலார் தங்கவயல்:
கோலாரில் உள்ள 'விஸ்ட்ரான்' செல்போன் நிறுவன ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
விஸ்ட்ரான் செல்போன்நிறுவனம்
கோலார்(மாவட்டம்) நகரை அடுத்துள்ள நரசாபுராவில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் குறிப்பிடும்படியாக விஸ்ட்ரான் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு செல்போன்களின் உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 6 மாதங்களாக சம்பளம் கொடுக்காததால் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
செல்போன் நிறுவனத்தை அடித்து நொறுக்கியதுடன் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர். அதனால், இந்த நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இறுதியில் தொழில் துறை மந்திரியாக இருந்த ஜெகதீஷ் ஜெட்டர் தலையிட்டு பிரச்சினையை தீர்த்து வைத்தார்.
ஊழியர்கள் தர்ணா
இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், நேற்று ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தொழிற்சாலை எதிரே திரண்டு ஊதிய உயர்வு கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆயிரக்கணக்கான ஊழியர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 3 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற வன்முறை சம்பவங்களை போல் மீண்டும் நடக்காமல் இருக்க அங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். காலவரையற்ற இந்த தர்ணா போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.