மனித கழிவை உடல் மீது ஊற்றி தூய்மை பணியாளர்கள் 2 பேர் போராட்டம்
|சம்பளம் வழங்காததால் மனித கழிவை உடல் மீது ஊற்றி தூய்மை பணியாளர்கள் ௨ பேர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது.
ராமநகர்:
ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா கல்லஹள்ளி கிராம பஞ்சாயத்தில் கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து தூய்மை பணியாளர்களாக சுரேஷ் மற்றும் ரங்கய்யா ஆகியோர் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் 2 பேருக்கும் கடந்த 14 மாதங்களாக சம்பளமே வழங்கவில்லை. தங்களுக்கான சம்பளத்தை வழங்கும்படி கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் சுரேஷ் , ரங்கய்யா கேட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் கிராம பஞ்சாயத்து முன்பாக தூய்மை பணியாளர்கள் சுரேஷ், ரங்கய்யா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது 2 பேரும் திடீரென்று தங்கள் உடல் மீது மனித கழிவை ஊற்றிக் கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த அரசு அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தி 2 பேருக்கும் சம்பளம் வழங்க உத்தரவிட்டனர். அதைத்தொடர்ந்து, சுரேஷ், ரங்கய்யாவுக்கு தலா ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 400-க்கான காசோலையும், ரூ.50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட்டது. இதையடுத்து, 2 பேரும் போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து சம்பளத்தை வழங்காத அதிாரிகள் மீது விசாரணை நடத்தப்படும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.