கர்நாடகத்தில் இன்று நடக்க இருந்த முழு அடைப்பு வாபஸ்; டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு
|பா.ஜனதா அரசின் ஊழல்களை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கர்நாடகத்தில் இன்று(வியாழக்கிழமை) நடைபெற இருந்த முழு அடைப்பு போராட்ட முடிவை வாபஸ் பெறுவதாக டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்.
பெங்களூரு:
பா.ஜனதா அரசின் ஊழல்களை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கர்நாடகத்தில் இன்று(வியாழக்கிழமை) நடைபெற இருந்த முழு அடைப்பு போராட்ட முடிவை வாபஸ் பெறுவதாக டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்.
முழு அடைப்பு
கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ.வும், மைசூரு சாண்டல் சோப்பு வாரிய தலைவருமான மாடால் விருபாக்ஷப்பாவின் மகன் பிரசாந்த், கடந்த 4-ந் தேதி ஒப்பந்ததாரர் ஒருவரிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும்-களவுமாக பிடிபட்டார். அவர் தற்போது சிறையில் உள்ளார். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள மாடால் விருபாக்ஷப்பாவுக்கு ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
இந்த நிலையில் பா.ஜனதா அரசின் ஊழல்களை கண்டித்து 9-ந் தேதி(இன்று) 2 மணி நேரம் முழு அடைப்பு நடைபெறும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் அறிவித்தார். ஆனால் இன்றைய தினம் பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற இருந்த 2 மணி நேர முழு அடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்படும் என்று கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எங்களுக்கு முக்கியம்
பா.ஜனதா அரசின் ஊழல்களை கண்டித்து நாளை(இன்று) காலை 9 மணி முதல் 11 மணி வரை 2 மணி நேர அடையாள முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தோம். ஆனால் பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு தொடங்க இருப்பதால், இந்த முழு அடைப்பு போராட்ட முடிவை வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம். எங்கள் கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பி.யூ.சி. தேர்வு தொடங்குவதால், முழு அடைப்பால் தங்களுக்கு தொந்தரவு ஏற்படும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவலை தெரிவித்தனர். அவர்களின் நலன் தான் எங்களுக்கு முக்கியம். அதனால் அவர்களின் கருத்துகளுக்கு நாங்கள் மதிப்பு அளிக்கிறோம்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.