கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தர்ணா
|முல்பாகலில், கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோலார், மே.28-
முல்பாகலில், கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
விரைவு சாலை
கோலார் மாவட்டம் பேத்தமங்களா, முல்பாகல் மார்க்கமாக பெங்களூரு-சென்னை இடையே விரைவு சாலை (எக்ஸ்பிரஸ் காரிடார்) அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஜல்லி கற்கள் தட்டுப்பாடால் குவாரி அமைத்து ஜல்லி கற்களை உற்பத்தி செய்ய அரசு அனுமதி வழங்கியது. இதற்காக முல்பாகல் பகுதியில் பண்டேஹள்ளி கிராமம் அருகில் குவாரி அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஆய்வு பணிகளை அரசு காண்டிராக்டர்கள் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது அங்கு வந்த பண்டேஹள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.
இந்த நிலையில் குவாரி அமைத்து அதில் வெடி மருந்து வைப்பதால் அருகில் உள்ள கிராமங்களில் பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. எனவே அந்த பகுதியில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பண்டேஹள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ேமலும், தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது அவர்கள் கூறியதாவது:-
கல்குவாரியில் வெடி வைத்து பாறைகளை உடைப்பார்கள். இதனால் அருகில் உள்ள கிராமங்களில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்படும். விளை நிலங்கள் நாசமாகும். மேலும், குவாரி அமைப்பதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிடும். எனவே குவாரி அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். இல்லையென்றால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தள்ளு-முள்ளு
இதற்கிடையே தகவல் அறிந்த முல்பாகல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீசார் பொதுமக்களை போராட்டத்தை கைவிட கோரினர். மேலும், இந்த பிரச்சினைக்கு பேசி தீர்வு காணப்படும் என கூறினர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளு-முள்ளு காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், சாலை பணிகள் நடைபெறுவதால் தற்போது போராட்டதை கைவிடுமாறு போலீசார் அறிவுறுத்தினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதேபோல் கோலார் மாவட்ட தலித் அமைப்பினர் முல்பாகல் பகுதியில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.