< Back
தேசிய செய்திகள்
தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பிற்கு எதிர்ப்பு- பெங்களூருவில் கன்னட அமைப்பினர் போராட்டம்
தேசிய செய்திகள்

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பிற்கு எதிர்ப்பு- பெங்களூருவில் கன்னட அமைப்பினர் போராட்டம்

தினத்தந்தி
|
21 Sep 2023 8:52 PM GMT

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கக்கூடாது என்று வலியுறுத்தி கர்நாடக ரக்‌ஷண வேதிகே அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தன்.

பெங்களூரு:-

போராட்டம்

சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கனஅடி நீரை திறக்கும்படி கர்நாடக அரசுக்கு நேற்று உத்தரவிட்டுள்ளது. இதை கண்டித்து மண்டியா விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. கர்நாடக ரக்ஷண வேதிகே அமைப்பினர் மாநில தலைவர் நாராயணகவுடா தலைமையில் பெங்களூரு காந்திநகரில் நேற்று போராட்டம் நடைபெற்றது.

அவா்கள் அங்கிருந்து ஊர்வலமாக விதான சவுதாவை நோக்கி புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவர்கள் கர்நாடக காங்கிரஸ் அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். தமிழக அரசுக்கு எதிராகவும் அவர்கள் பேசினர்.

அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அந்த சமயத்தில் கன்னட அமைப்பினர் பி.எம்.டி.சி. பஸ் முன்பு படுத்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து போலீசார், நாராயணகவுடா மற்றும் கன்னட அமைப்பினரை கைது செய்து வேனில் அங்கிருந்து அழைத்து சென்றனர்.

நீதி கிடைக்கும்

அப்போது நாராயணகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், "நிலம், நீர், மொழியை காக்க நாங்கள் எந்த தியாகத்திற்கும் தயாராக உள்ளோம். காவிரி நீரை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். கர்நாடகத்திற்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்.

சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள உத்தரவை கர்நாடக அரசு நிராகரிக்க வேண்டும். இதன் மூலம் கர்நாடகத்தின் நலனை காக்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் கட்சி பேதமின்றி ஒற்றுமையாக போராட மாநிலத்தின் நலனை காக்க வேண்டும்" என்றார்.

மேலும் செய்திகள்