கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து சீனாவில் வலுக்கும் போராட்டம்
|சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது.
பீஜிங்,
சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனாவின் புதிய அலை அங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அங்கு கடந்த 6 மாதங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு தினந்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
இதற்கிடையில் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக அரசு விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது அரசு எதிர்ப்பு போராட்டமாக மாறி நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.
தலைநகர் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மக்கள் இரவு, பகல் பாராமல் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராகவும், அதிபர் ஜின்பிங்கை பதவி விலக வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பியபடி சாலைகளில் ஊர்வலமாக செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
போராட்டம் தீவிரமாக இருந்து வரும் ஷாங்காய் நகரில் சாலையெங்கும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஆனாலும் அதை மீறியும் அங்கு மக்கள் வீதிக்கு வந்த போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் பதற்றமான சூழல் நீடிக்கிறது. இதனிடையே ஷாங்காய் நகரில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டதாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட பலரை போலீசார் கைது செய்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவில் இதுபோன்ற அரசு எதிர்ப்பு போராட்டங்கள் மிகவும் அரிதானவை ஆகும்.
இந்த சூழலில் அங்கு போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவது அதிபர் ஜின்பிங் தலைமையிலான அரசுக்கு தலைவலியாக அமைந்துள்ளது.
இதனிடயே இந்த போராட்டங்களுக்கு மத்தியில் சீனாவில் கொரோனா பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 39,452 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை சீனாவின் தேசிய சுகாதார கமிஷன் தெரிவித்தது.