வேட்டி அணிந்து சென்ற விவசாயிக்கு அனுமதி மறுப்பு.. வணிக வளாகத்திற்கு எதிராக போராட்டம்
|இது ஏற்றுக்கொள்ள முடியாத செயல், வேட்டி நமது பாரம்பரிய உடை என காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹரிஸ் தெரிவித்தார்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் மகதி சாலை அருகே ஜி.டி. மால் என்ற வணிக வளாகம் உள்ளது. இங்குள்ள ஒரு தியேட்டரில் படம் பார்ப்பதற்காக பாகீரப்பா என்ற விவசாயி தனது மகனுடன் நேற்று சென்றுள்ளார். ஆனால் வேட்டி அணிந்திருந்ததால் அவரை உள்ளே செல்ல பாதுகாவலர்கள் அனுமதிக்கவில்லை. வேட்டி அணிந்து வந்தால் அனுமதிக்கக்கூடாது என நிர்வாகம் தெரிவித்திருப்பதாகவும், பேண்ட் அணிந்து வந்தால் போகலாம் என்றும் கூறி உள்ளனர்.
இது தொடர்பான வீடியோ வைரலானது. வயதில் மூத்த விவசாயி வேட்டி அணிந்து வந்த காரணத்தால் அனுமதி அளிக்காத வணிக வளாக நிர்வாகத்திற்கு எதிர்ப்பு வலுத்தது. விவசாயிகள் மற்றும் கன்னட ஆதரவு அமைப்புகள் வணிக வளாகத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறினர். அதன்படி இன்று சில விவசாயிகள் மற்றும் கன்னட ஆதரவு அமைப்பினர், வணிக வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வணிக வளாகத்திற்கு உள்ளேயும் சென்றனர். வணிக வளாக நிர்வாகம் தரப்பில் மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது .
இது ஏற்றுக்கொள்ள முடியாத செயல், வேட்டி நமது பாரம்பரிய உடை என காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹரிஸ் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையே, சம்பந்தப்பட்ட விவசாயி மற்றும் அவரது மகனிடம் வணிக வளாக பாதுகாவலர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.