< Back
தேசிய செய்திகள்
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்
தேசிய செய்திகள்

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்

தினத்தந்தி
|
18 March 2023 3:37 AM IST

25 சதவீத சம்பள உயர்வு வழங்க கோரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம், திட்டமிட்டபடி வருகிற 21-ந் தேதி வேலை நிறுத்தம் தொடங்கும் என்று அறிவித்துள்ளது. இதனால் அரசு பஸ் சேவை முடங்கும் அபாயம் உள்ளது.

பெங்களூரு:

25 சதவீத சம்பள உயர்வு வழங்க கோரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம், திட்டமிட்டபடி வருகிற 21-ந் தேதி வேலை நிறுத்தம் தொடங்கும் என்று அறிவித்துள்ளது. இதனால் அரசு பஸ் சேவை முடங்கும் அபாயம் உள்ளது.

சம்பள உயர்வு கோரிக்கை

கர்நாடக சட்டசபைக்கு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்காக பல்வேறு சங்கத்தினர் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தரும்படி அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.

ஏற்கனவே கர்நாடக அரசு ஊழியர்கள் சங்கம், மின்வாரிய ஊழியர்கள் சங்கம் சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தன. இந்த போராட்ட எச்சரிக்கைக்கு அடிபணிந்த கர்நாடக அரசு, அரசு ஊழியர்களுக்கு 17 சதவீதமும், மின்வாரிய ஊழியர்களுக்கு 20 சதவீதமும் சம்பள உயர்வு வழங்கியது. இதையடுத்து இரு சங்கத்தினரும் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

போக்குவரத்து ஊழியர்கள்

இந்த நிலையில் சம்பள உயர்வு வழங்க கோரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் வருகிற 21-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் அரசுக்கு நெருக்கடி ஏற்படும் என கருதிய முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை, போக்குவரத்து ஊழியர்களுக்கு 15 சதவீத சம்பள உயர்வு வழங்குவதாக நேற்று முன்தினம் அதிரடியாக அறிவித்தார்.

இதனால் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டமும் வாபஸ் பெறப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த 15 சதவீத சம்பள உயர்வு குறைவாக உள்ளது என்றும், தங்களுக்கு குறைந்தது 25 சதவீதம் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்றும் போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தினர் திடீரென்று போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

தங்களது இந்த கோரிக்கையை உடனே அரசு நிறைவேற்ற வேண்டும் இல்லையெனில் தாங்கள் ஏற்கனவே அறிவித்தப்படி வருகிற 21-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கும் என்றும் போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தினர் கூறியுள்ளனர்.

பேச்சுவார்த்தை தோல்வி

இந்த விவகாரம் தொடர்பாக போக்குவரத்து துறை மந்திரி ஸ்ரீராமுலு ஏற்கனவே ஊழியர்கள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அதன்பிறகே போக்குவரத்து ஊழியர்கள் போராட்ட அறிவிப்பை வெளியிட்டனர்.

இந்த நிலையில் வருகிற 20-ந் தேதி, அரசு போக்குவரத்து கழகங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே ஊழியர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படும்.

திட்டமிட்டபடி போராட்டம்

இதுகுறித்து அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்க தலைவர் அனந்த சுப்பாராவ் கூறுகையில், "சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நாங்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம். அரசு 15 சதவீத சம்பள உயர்வு வழங்குவதாக கூறியுள்ளது. இது போதாது.

திட்டமிட்டபடி வருகிற 21-ந் தேதி முதல் வேலை நிறுத்தம் தொடங்கும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்பது எங்களின் நோக்கம் அல்ல. எங்களுக்கு உரிய சம்பள உயர்வு வழங்க வேண்டும். இந்த கோரிக்கை நிறைவேறும் வரை வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற மாட்டோம்" என்றார்.

பஸ்களின் சேவை முடங்கும்

அரசு போக்குவரத்து ஊழியர்கள் குறைந்தது தங்களுக்கு 25 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கேட்கிறார்கள். பேச்சுவார்த்தையின்போது, அரசு இன்னும் கூடுதல் சம்பள உயர்வு வழங்க வாய்ப்பு உள்ளது. அவ்வாறு வழங்கினால் இந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஒருவேளை திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் தொடங்கினால் மாநிலத்தில் 23 ஆயிரம் அரசு பஸ்களின் சேவை முடங்கும் நிலை உருவாகும். இதனால் யுகாதி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல இருப்பவர்கள் திண்டாடும் நிலை ஏற்படும்.

மேலும் செய்திகள்