< Back
தேசிய செய்திகள்
மண்டியா கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
தேசிய செய்திகள்

மண்டியா கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

தினத்தந்தி
|
24 Feb 2023 8:40 PM GMT

பால், கரும்புக்கு ஆதரவு விலை வழங்க கோரி மண்டியா கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மண்டியா:

பால், கரும்புக்கு ஆதரவு விலை வழங்க கோரி மண்டியா கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் போராட்டம்

கர்நாடகத்தின் சர்க்கரை மாவட்டம் என்று மண்டியா அழைக்கப்படுகிறது. இங்கு பெரும்பாலான விவசாயிகள் கரும்பு பயிரிட்டு வளர்த்து வருகிறார்கள். இதனால் அங்கு சர்க்கரை ஆலையும் அதிகளவில் காணப்படுகிறது. விவசாயிகள் சாகுபடி செய்யும் கரும்புகள், சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைத்து வருகிறார்கள். இந்த நிலையில், கரும்புக்கு ஆதரவு விலை கோரி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஆனால் அரசு கரும்புக்கு ஆதரவு விலை நிர்ணயிக்கவில்லை.

இந்த நிலையில் கரும்புக்கும், பாலுக்கும் ஆதரவு விலை நிர்ணயிக்க வலியுறுத்தி நேற்று முன்தினம் மண்டியா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளை கலெக்டர் அலுவலகத்துக்கு முன்பு நிறுத்தி இருந்தனர். விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு விவசாய சங்கத்தினர் உள்பட பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டனர்.

தள்ளுமுள்ளு

இந்த போராட்டத்தின்போது விவசாயிகள் கூறுகையில், கரும்பு மற்றும் பாலுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் விவசாயிகளுக்கு கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை. உடனடியாக கரும்பு டன்னுக்கு ரூ.4,500-ம், பால் லிட்டர் ரூ.40-ம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இல்லை என்றால் மாநிலம் முழுவதும் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றனர்.

பின்னர் விவசாயிகள் கலெக்டர் கோபாலகிருஷ்ணாவை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்து சென்றனர். இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்துகொண்டனர். முன்னதாக டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளுடன் வந்த விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த போராட்டத்தால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்