< Back
தேசிய செய்திகள்
மங்களூரு பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு மாணவ அமைப்பினர் போராட்டம்
தேசிய செய்திகள்

மங்களூரு பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு மாணவ அமைப்பினர் போராட்டம்

தினத்தந்தி
|
21 Dec 2022 12:15 AM IST

மதிப்பெண் பட்டியல் வழங்க காலதாமதம் ஆனதால் மங்களூரு பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் அவர்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மங்களூரு:

முற்றுகை போராட்டம்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே கோனஜே பகுதியில் மங்களூரு பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஆராய்ச்சி படிப்புகள் படித்து முடித்த மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் காலதாமதம் செய்து வருகிறது. இதை கண்டித்து நேற்று மாணவர் அமைப்பினர் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அந்த சந்தர்ப்பத்தில் போலீசாருக்கும், மாணவர் அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாணவர் அமைப்பினர் போலீசாரை தள்ளிக்கொண்டு முன்னேறி சென்றனர். அவர்கள் போலீசாரின் தடுப்பு வளையத்தையும் மீறி உள்ளே புகுந்து போராட்டம் நடத்தினார்கள்.

முதல்வர் உறுதி

அதையடுத்து பல்கலைக்கழக முதல்வர் எடபதிதாயா மற்றும் பேராசிரியர் தர்மா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் விரைவாக மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என்று பல்கலைக்கழக முதல்வர் எடபதிதாயா, பேராசிரியர் தர்மா ஆகியோர் உறுதி அளித்தனர்.

அதை ஏற்றுக்கொண்ட மாணவர் அமைப்பினர் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்