கவுரவதொகை ரூ.16 ஆயிரம் வழங்க கோரி ஒப்பந்த மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
|சிக்கமகளூருவில், அரசு வாக்குறுதி அளித்தபடி கவுரவதொகை ரூ.16 ஆயிரம் வழங்க கோரி ஒப்பந்த மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிக்கமகளூரு:
சிக்கமகளூருவில், அரசு வாக்குறுதி அளித்தபடி கவுரவதொகை ரூ.16 ஆயிரம் வழங்க கோரி ஒப்பந்த மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒப்பந்த மருத்துவ ஊழியர்கள்
சிக்கமகளூரு மாவட்டம் பேளூர் ரோட்டில் சுகாதார துறை அலுவலகம் உள்ளது. இந்த நிலையில் சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஏராளமான மருத்துவ ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு மாதந்தோறும் கவுரவ தொகையாக ரூ.16 ஆயிரம் வழங்கப்படும் என்று அரசு வாக்குறுதி அளித்திருந்தது.
ஆனால் அவர்களுக்கு குறைந்த அளவே கவுரவதொகை வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்கள் அரசு சார்பில் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய கவுரவதொகை உரிய முறையில் வழங்கப்படவில்லை என்றும், மாதந்தோறும் ரூ.16 ஆயிரம் வழங்குவதாக வாக்குறுதி அளித்துவிட்டு ரூ.10 ஆயிரத்தை மட்டுமே வழங்குவதாகவும் புகார் கூறி வந்தனர்.
அதிகாரியிடம் மனு
மேலும் இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று அவர்கள் சுகாதார துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது அவர்கள் தங்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட வேண்டிய கவுரவதொகை ரூ.16 ஆயிரத்தை உரிய முறையில் வழங்க வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார துறை அதிகாரியிடம் மனு கொடுத்தனர்.