திருப்பதியில் பிரமோற்சவ விழா: சின்னசேஷ வாகனத்தில் ஏழுமலையான் வீதியுலா
|திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவ விழாவையொட்டி சின்னசேஷ வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா நடந்தது
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவம் நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை வழங்கினார். இதனை தொடர்ந்து நேற்று இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளினார்.
இந்நிலையில் இன்று காலை பிரமோற்சவ விழாவையொட்டி சின்னசேஷ வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா நடந்தது. மாட வீதிகளில் ஏழுமலையான் பவனி வந்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சாமி ஊர்வலத்துக்கு முன்பாக பல்வேறு மாநில கலைநிகழ்ச்சிகள் நடந்தது. முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி இன்று திருமலையில் சுவாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி முழுவதும் வண்ண மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளதால் பிரமோற்சவ விழா களைகட்டி உள்ளது. பிரமோற்சவத்தையொட்டி கோவிலில் வி.ஐ.பி. தரிசனங்கள், ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. திருப்பதி அலிபிரி நடைபாதையில் செல்லும் பக்தர்கள் வனவிலங்குகளிடம் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள தேவஸ்தானம் சார்பில் வழங்கப்படும் கம்புகளை எடுத்து செல்கின்றனர்.
மேலும் குழந்தைகளுடன் செல்லும் பக்தர்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட விதிமுறைகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளன.