< Back
தேசிய செய்திகள்
உடல் நலம் குணமாகாததால் மங்களூரு குண்டுவெடிப்பு பயங்கரவாதி ஷாரிக்கிடம் வாக்குமூலம் பெறுவதில் சிக்கல்
தேசிய செய்திகள்

உடல் நலம் குணமாகாததால் மங்களூரு குண்டுவெடிப்பு பயங்கரவாதி ஷாரிக்கிடம் வாக்குமூலம் பெறுவதில் சிக்கல்

தினத்தந்தி
|
23 Nov 2022 3:23 AM IST

மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு பயங்கரவாதி ஷாரிக்கின் உடல்நலம் குணமாகாததால் அவரிடம் வாக்குமூலம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கோவை ஜமேஷா முபினை அவர் சந்தித்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

மங்களூரு:

மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு

மங்களூருவில் உள்ள நாகுரி பகுதியில் கடந்த 19-ந்தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்து சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த வெடிகுண்டு சம்பவத்தில் ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் காயம் அடைந்த ஒரு நபர், தேடப்பட்டு வந்த சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த பயங்கரவாதி ஷாரிக் (வயது 24) என்பது தெரியவந்தது. மேலும் அவர் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு குக்கர் வெடிகுண்டை கொண்டு சென்றதும், ஆட்டோவில் செல்லும்போது அது வெடித்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.), உளவுத்துறை, போலீஸ் துறையில் உள்ள துப்பறியும் பிரிவுகளை சேர்ந்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீடுகளில் சோதனை

மங்களூரு போலீசார் சிவமொக்காவுக்கு சென்று ஷாரிக்கின் பெற்றோர் மற்றும் அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்களை மங்களூருவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் ஷாரிக் தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர் மோகன்குமார், கோவையில் ஷாரிக்கிற்கு செல்போன் சிம்கார்டு வாங்கி கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியர் சுரேந்திரன், மைசூருவில் ஷாரிக் செல்போன் பழுது பார்க்க பயிற்சி பெற்ற கடை உரிமையாளர் மற்றும் ஊழியர், ஷாரிக்குடன் ெதாடர்பில் இருந்த மைசூருைவ ேசர்ந்த முகமது என்பவர் உள்பட 5 ேபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கோவை, நாகர்கோவிலிலும் போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர். மேலும் நேற்றுமுன்தினம் அதிகாலை சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா சொப்புகுட்டே பகுதியில் உள்ள ஷாரிக்கின் வீடு, உறவினர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்திய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஷாரிக் கொண்டு வந்த பை

இதையடுத்து ஷாரிக், வெடிகுண்டு சம்பவத்தை நிகழ்த்த திட்டமிட்டது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதில் வெடிகுண்டு விபத்தை மங்களூருவில் நிகழ்த்த அவர் திட்டமிட்டது தெரியவந்தது. அதாவது முதலில் மைசூருவில் இருந்து குடகு மாவட்டம் மடிகேரிக்கு ஷாரிக் பஸ்சில் வந்து இறங்கியுள்ளார். பின்னர் மடிகேரியில் இருந்து புத்தூர் பி.சி.ரோடு பம்ப்வெல் பகுதிக்கு பஸ்சில் வந்துள்ளார். பின்னர் அங்கு வெடிகுண்டு வைக்கும் இடத்தை நோட்டமிட்டுவிட்டு நாகுரிக்கு நடந்து வந்த ஷாரிக் மீண்டும் புருஷோத்தம் பூஜாரியின் ஆட்டோவில் பம்ப்ெவல் பகுதிக்கு செல்ல முயன்றுள்ளார்.

நாகுரிக்கு வந்தபோது எதிர்பாராதவிதமாக குக்கர் வெடிகுண்டு வெடித்தது தெரியவந்தது. ஆனால் அதேநேரத்தில் இந்த திட்டம் வெற்றி பெற்றால் போலீசிடம் இருந்து தப்பிக்கவும் ஷாரிக் ஏற்கனவே திட்டம் தீட்டி வைத்ததும் தெரியவந்தது.

தற்போது குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முன்பு ஷாரிக், பை ஒன்றை தனது தோளில் சுமந்து செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால் அப்போது அவர் வைத்த பையில் குக்கர் வெடிகுண்டு இருந்ததா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜமேஷா முபினுடன் சந்திப்பு

இந்த நிலையில் ஷாரிக், கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபினை சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் இருவரும் கடந்த செப்டம்பர் மாதம் கோவை சிங்காநல்லூரில் சந்தித்ததாக கூறப்படுகிறது.

இதனால் கோவை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து அவருக்கு வெடிப்பொருட்கள், நிதி உதவி ஏதேனும் கிடைத்திருக்கலாம் என என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.

அதேநேரத்தில் கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 6 பேருடனும் ஷாரிக்குக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் ஷாரிக்கிற்கு தொடர்பு இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. அத்துடன் கோவை பாணியிலேயே மங்களூருவிலும் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டை ஷாரிக் எடுத்துச் சென்ற போது அந்த குக்கர் குண்டு வெடித்துள்ளது. எனவே கோவையிலும், மங்களூருவிலும் நாசவேலை செய்ய ஒரே கும்பல் சதி திட்டம் தீட்டியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

இந்த நிலையில், பயங்கரவாதி ஷாரிக், குண்டுவெடிப்பில் சிக்கி காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதால், அவர் குணம் அடைந்ததும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

போலீஸ் கமிஷனர் விசாரணை

இந்த நிலையில், குண்டுவெடிப்பில் காயம் அடைந்த 2 பேரும் மங்களூருவில் உள்ள பாதர் முல்லர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில், பாதர் முல்லர் மருத்துவமனைக்கு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் சென்று, சிகிச்சை பெற்று வரும் 2 பேரின் உடல் நலம் குறித்து டாக்டர்களிடம் விசாரித்தார்.

பயங்கரவாதி ஷாரிக் சிகிச்சை பெற்று வரும் அறையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்பத்திரி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை

இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போலீஸ் கமிஷனர் சசிகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து போலீஸ் கமிஷனர் சசிகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

குக்கர் குண்டு வெடித்ததில் ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் இரு கைகளிலும், முதுகு மற்றும் முகத்திலும் காயம் அடைந்துள்ளார். அவர் 25 சதவீதம் தீக்காயம் அடைந்துள்ளார். பயங்கரவாதி ஷாரிக்கிற்கு 2 கைகள், விரல்கள், இரு கால்கள், முகம் மற்றும் முதுகிலும் காயம் உள்ளது. அவர் 45 சதவீதம் காயம் அடைந்துள்ளார். பயங்கரவாதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நாள் முதல் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. அவரது உடல் நிலை மோசமாக உள்ளது. அவரது உடல் நிலையை மேம்படுத்த சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. ஷாரிக் பூரண குணமடைந்து விட்டதாக டாக்டர் சான்றிதழ் அளித்த பிறகு, அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்துவோம்.

இந்த வழக்கில் நாங்கள் முழுமையாக விசாரணை நடத்துவோம். அவர் எங்கு சென்றார், யாரை சந்தித்தார் என்பது குறித்து முழுமையாக விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

வாக்குமூலம் பெறுவதில் சிக்கல்

குண்டுவெடிப்பில் காயமடைந்த ஷாரிக் 45 சதவீத அளவுக்கு தீக்காயம் அடைந்துள்ளார். குறிப்பாக அவரது முகம், கண், கை, கால் விரல்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதில் அவரால் ஒரு கண்ணை திறக்க முடியவில்லை எனவும், வாய் திறந்து பேசவும் அவரால் முடியவில்லை என போலீசார் கூறியுள்ளனர். எனவே அவரிடம் வாக்குமூலம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதுபோல் அவரிடம் எழுத்துப்பூர்வமான வாக்குமூலம் பெற போலீசார் முயற்சித்ததாகவும், ஆனால் குண்டுவெடிப்பில் அவரது கைவிரல்களில் பாதிப்பு உள்ளதால் அவரால் எழுத முடியவில்லை என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் அவரிடம் வெடிகுண்டு சம்பவம் மற்றும் பயங்கரவாத செயல்கள் தொடர்பாகவும், பயங்கரவாத அமைப்புடனான தொடர்பு பற்றிய தகவல்களை வாக்குமூலமாக பெற முடியாமல் போலீசாரும், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் காத்திருந்து வருகிறார்கள்.

ஷாரிக்கின் சகோதரிகளின் வங்கி கணக்குகளுக்கு வந்த பல லட்சம் ரூபாய் பணம்?

மங்களூருவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததும் ஷாரிக்கின் சகோதரிகளின் வங்கி கணக்கிற்கு பல லட்சம் ரூபாய் பணம் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பணம் யாரிடம் இருந்து ஷாரிக்கின் சகோதரிகளின் வங்கி கணக்கிற்கு வந்தது என்றும், குண்டு வெடிப்பு சதி செயலை அரங்கேற்றம் செய்ததற்காக ஷாரிக்கிற்காக பயங்கரவாத அமைப்பினர் வழங்கினரா என்பது பற்றியும் என்.ஐ.ஏ. மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வதந்திகளை பரப்ப வேண்டாம்- போலீஸ் கமிஷனர் வேண்டுகோள்

மங்களூரு போலீஸ் கமிஷனர் சசிகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த மங்களூரு நாகுரி பகுதிக்கு அருகில் உள்ள மதுக்கடைக்கு ஆட்டோவில் இருந்து ஷாரிக்குடன் மற்றொரு நபரும் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஷாரிக்குடன் மற்றொருவர் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தினோம். அந்த வீடியோவில் இருக்கும் நபர் குற்றம்சாட்டப்பட்டவர் அல்ல. குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. காவல் துறையால் உறுதிப்படுத்தும் வரை யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம். குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு முன்பு ஷாரிக், மசூதிக்கு சென்றதாக தகவல் பரவுகிறது. இதுவும் உண்மை அல்ல.

மேலும் செய்திகள்