ஹேமந்த் சோரனின் ஜாமீனுக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு தள்ளுபடி
|ஹேமந்த் சோரனின் ஜாமீனுக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி,
ஜார்க்கண்ட் முதல்-மந்திரியாக இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன் நிலமோசடி வழக்கில் கடந்த ஜனவரி 31-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். முன்னதாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். எனவே அவரது அரசில் மந்திரியாக இருந்த சம்பாய் சோரன், புதிய முதல்-மந்திரியானார்.
சுமார் 5 மாதங்கள் சிறையில் இருந்த ஹேமந்த் சோரனுக்கு ஜூன் 28-ம் தேதி ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் சிறையில் இருந்து விடுதலையானார். எனவே அவர் மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்க கட்சியினரும், கூட்டணி தலைவர்களும் விரும்பினர். இதற்கு வசதியாக முதல்-மந்திரி பதவியில் இருந்து சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத்தொடர்ந்து ஜார்க்கண்டின் 13-வது முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் கடந்த 4-ம் தேதி பதவியேற்றார். இதற்கிடையே ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கிய ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை கடந்த 9ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.
இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன் மற்றும் பி.ஆர்.கவாய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பில் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஹேமந்த் சோரனின் ஜாமீன் அமலாக்கத்துறையின் விசாரணையை பாதிக்காது என தெரிவித்தனர். மேலும் ஐகோர்ட்டின் தீர்ப்பில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என தெரிவித்து மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தனர்.