பிரியங்கா காந்தி என்னுடைய முன்னாள் கணவரிடம்... பெண் எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி
|அதிதி சிங், 2017-ம் ஆண்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, உத்தர பிரதேச சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. இதன்படி, நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது. இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா காந்திக்கு எதிராக பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
உத்தர பிரதேசத்தின் ரேபரேலி சதர் தொகுதியை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. அதிதி சிங். மறைந்த அரசியல்வாதியான அகிலேஷ் சிங்கின் மகளான அதிதி சிங் இதற்கு முன்பு, காந்தி குடும்பத்திற்கு நெருங்கிய நபராக இருந்தவர். காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச பொது செயலாளர் (கிழக்கு) பிரியங்கா காந்தியின் சகோதரியாக பார்க்கப்பட்டவர்.
இந்நிலையில், இவர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிட சீட் வேண்டுமென்றால், என்னை பற்றி தவறாக பேசும்படி என்னுடைய முன்னாள் கணவரிடம் பிரியங்கா காந்தி கூறினார் என்று அதிதி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, உத்தர பிரதேச சட்டசபைக்கு அதிதி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், 2021-ம் ஆண்டு நவம்பரில் காங்கிரசிலிருந்து விலகி, பா.ஜ.க.வில் சேர்ந்து விட்டார். அவரை பா.ஜ.க., ரேபரேலி சதர் தொகுதியில் நிறுத்தியது.
அதில், 1.02 லட்சம் வாக்குகள் பெற்று அதிதி வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாடி கட்சியின் ராம் பிரதாப் யாதவ் 95 ஆயிரம் வாக்குகளுடன் 2-வது இடத்திற்கும், காங்கிரஸ் வேட்பாளர் 3-வது இடத்திற்கும் தள்ளப்பட்டனர்.