ராகுல்காந்தியின் ஒற்றுமைக்கான நீதி யாத்திரையில் பிரியங்கா காந்தி பங்கேற்பு
|இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் கடந்த 16-ந்தேதி பிரியங்கா காந்தி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
லக்னோ,
நாடாளுமன்ற தேர்தல் நடப்பு ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
அவர் மணிப்பூரில் இருந்து மும்பை நோக்கி 15 மாநிலங்களை உள்ளடக்கிய 6,700 கி.மீ. தொலைவை நடைபயணம் வழியே கடந்து செல்ல திட்டமிட்டு உள்ளார்.
இந்த யாத்திரையில், அவருடைய சகோதரி மற்றும் காங்கிரஸ் பொது செயலாளரான பிரியங்கா காந்தி கடந்த 16-ந்தேதி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருடைய உடல்நலம் பாதித்த நிலையில், அவரால் அதில் பங்கேற்க முடியவில்லை.
அவர் டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். நீரிழப்பு மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர், சிகிச்சை முடிந்து கடந்த 19ம் தேதி வீடு திரும்பினார்.
இதையடுத்து ராகுல் காந்தி நடத்தும் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் இன்று பிரியங்கா காந்தி கலந்து கொள்வார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், இந்த யாத்திரை தற்போது உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தி இணைந்துள்ளார். மொராதாபாத்தில் இருந்து தொடங்கி சம்பால், அலிகர், ஹத்ராஸ் மற்றும் ஆக்ரா மாவட்டங்கள் வழியாக 25ம் தேதி (நாளை) ராஜஸ்தான் செல்கிறார்.
இதையடுத்து 26-ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை 5 நாட்கள் யாத்திரைக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இடையே உரையாற்றுவதற்காக ராகுல் காந்தி லண்டன் செல்கிறார். 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் மாணவர்களிடையே உரையாற்ற உள்ளார். அதன்பின்னர் நாடு திரும்பும் அவர், டெல்லியில் முக்கிய கூட்டங்களில் கலந்துகொள்கிறார்.