ஓ.பி.சி. பிரிவினருக்கு நீதி வழங்க சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் - பிரியங்கா காந்தி
|ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு நீதி வழங்க நாடுதழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பிரியங்கா காந்தி கூறினார்.
போபால்,
சட்டசபை தேர்தல் நடக்க உள்ள மத்தியபிரதேச மாநிலம் மண்ட்லா மாவட்டத்தில் காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. அதில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கலந்துகொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
சமீபத்தில், பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், இதர பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., எஸ்.டி. ஆகியோர் மொத்த மக்கள்தொகையில் 84 சதவீதம் இருப்பதாக தெரியவந்தது.
ஆனால், அரசு வேலைவாய்ப்பில் அந்த சமூகத்தினர் மிகக்குறைவாகவே உள்ளனர். எனவே, அவர்களின் துல்லியமான எண்ணிக்கையை தெரிந்து கொள்ளவும், அவர்களுக்கு நீதி வழங்கவும் நாடுதழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
இந்திரா போல் இருக்கிறேன்
மத்தியபிரதேசத்தில் பா.ஜனதாவின் 18 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. தேர்தல் வரும்போதுதான் மக்களை நினைவுபடுத்தி, ஏதேனும் திட்டங்களை அறிவிப்பார்கள்.
எனக்கு முன்பு பேசியவர்கள் என் பாட்டி இந்திராகாந்தி பற்றி குறிப்பிட்டனர். அவரை 'இந்திரா அம்மா' என்று அழைக்கிறீர்கள். இங்கு வந்துள்ள முதியவர்களுக்கு அவரை பற்றிய நினைவு இருக்கும்.
நான் அவரது பேத்தி. எனது முகத்தோற்றம், என் பாட்டி போல் இருக்கிறது. அதனால் என்னை பார்க்க வந்திருக்கிறீர்கள். எனவே, உண்மையை பேச வேண்டும் என்பதிலும், இந்திராவின் பணிகளை முன்னெடுத்து செல்வதிலும் எனக்கு நிறைய பொறுப்பு இருக்கிறது.
இந்திராகாந்தி செய்த சாதனைகளால்தான் அவர் மீது மக்கள் நம்பிக்கை வைத்தனர். நீங்கள் அவரை முன்னுக்கு கொண்டு வந்தீர்கள். அவர் உங்களை முன்னுக்கு கொண்டு வந்தார். இதுதான் தலைவருக்கும், மக்களுக்கும் இடையிலான உறவு.
வாக்குறுதிகள்
மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.
முதல் வகுப்பு முதல் 12-ம்வகுப்புவரை இலவச கல்வி அளிப்பதுடன், முதல் வகுப்பு முதல் 8-ம்வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு மாதத்துக்கு ரூ.500-ம், 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ரூ.1,000-ம், 11 மற்றும் 12-ம் வகுப்பு படிப்பவர்களுக்கு ரூ.1,500-ம் உதவித்தொகை வழங்கப்படும்.
இதுதவிர, சிலிண்டர் ரூ.500-க்கு விற்கப்படும். பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும். 100 யூனிட்வரை இலவச மின்சாரமும், 200 யூனிட் மின்சாரம் பாதி விலைக்கும் வழங்கப்படும்.
5 குதிரை சக்திவரை கொண்ட மோட்டார் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.