நாட்டின் அனைத்து தலைநகரங்களில் மகளிர் பேரணி நடத்த பிரியங்கா காந்தி முடிவு
|நாட்டின் அனைத்து தலைநகரங்களிலும் 2 மாதங்களுக்கு மகளிர் பேரணியை நடத்த காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி முடிவு செய்துள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையில் ஈடுபட்டு உள்ளார். இந்த பாதயாத்திரை கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது.
தொடர்ந்து, தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாதயாத்திரை மேற்கொண்ட பிறகு அவர் தெலுங்கானாவுக்கு சென்றார். தெலுங்கானா மாநிலத்தில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை கடந்த அக்டோபர் 24-ந்தேதி தொடங்கியது.
நவம்பர் 7-ந்தேதியுடன் அவரது யாத்திரை தெலுங்கானாவில் நிறைவு பெற்றது. நவம்பர் 7-ந்தேதி இரவு மராட்டியத்தில் நுழைந்த அவர், 20-ந்தேதி வரை பாதயாத்திரை மேற்கொண்டார்.
இதன்பின்பு 2 நாள் ஓய்வுக்கு பின்னர், கடந்த நவம்பர் மாதம் 23-ந்தேதி முதல் பாதயாத்திரை மத்திய பிரதேசத்தில் நடந்து வருகிறது. இந்த யாத்திரை இன்றுடன் மத்திய பிரதேசத்தில் நிறைவடைந்து, பின்பு காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் நுழைகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கே.சி. வேணுகோபால் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில், வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி முதல் மார்ச் 26-ந்தேதி வரை நாட்டில் உள்ள அனைத்து தலைநகரங்களிலும் எங்களது கட்சி சார்பில் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில், மகளிர் பேரணி நடத்தப்படும்.
இதன்படி, இந்த மகளிர் பேரணி 2 மாதங்களுக்கு நடைபெறும். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நிறைவடையும்போது, அதன் தொடர்ச்சியாக, பிரியங்கா காந்தியின் மகளிர் பேரணி தொடங்கி நடைபெறும் என அவர் கூறியுள்ளார்.