"வெறுப்பு, பணவீக்கம் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்" - பிரியங்கா காந்தி ஆவேசம்
|பா.ஜ.க. பிரித்தாளும் சூழ்ச்சியை பின்பற்றுகிறது என்றும் வெறுப்பு, பணவீக்கம் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
புதுடெல்லி,
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவுதினத்தையொட்டி நேற்று காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் தனது எக்ஸ் (டுவிட்டர்) பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
"காந்திஜியின் அழைப்பின் பேரில், அன்று 'கொடுங்கோல் ஆட்சியே இந்தியாவை விட்டு வெளியேறு' என்று ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரே குரலில் கூறியது. ஆனால் அப்போது, இன்று ஆட்சியில் உள்ளவர்கள் மக்கள் இயக்கத்தில் பங்கேற்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
அவர்களின் பிரித்தாளும் தந்திரம் இன்றளவும் தொடர்கிறது. நமது ஒற்றுமை அவர்களை துரத்துகிறது. நாம் மாநிலங்களாக இணைந்து அவர்களுக்கு எதிராக, வெறுப்பே வெளியேறு, பணவீக்கமே வெளியேறு, வேலையின்மையே வெளியேறு, ஜெய்ஹிந்த், ஜெய்பாரத் என்று முழங்க வேண்டும் என்று பதிவிட்டு உள்ளார்.
மற்றொரு பதிவில் உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு பழங்குடியின சமூக உறுப்பினர்களுக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதில் ''ஸ்ரீ பிர்சா முண்டா, ஸ்ரீ சித்து கன்ஹு, ராணி துர்காவதி போன்றவர்கள் காட்டிய பாதையில், இந்திய தேசிய காங்கிரஸ் பழங்குடியினரின் நலன்கள் மற்றும் நீர், காடு மற்றும் நிலத்தின் உரிமைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது" என்று கூறி உள்ளார்.