'தைரியம் இருந்தால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்யுங்கள்'; மந்திரி பிரியங்க் கார்கேவுக்கு, பா.ஜனதா சவால்
|தைரியம் இருந்தால் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை விதியுங்கள் பார்க்கலாம் என்று மந்திரி பிரியங்க் கார்கேவுக்கு பா.ஜனதா சவால் விடுத்துள்ளது.
பெங்களூரு:
தைரியம் இருந்தால் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை விதியுங்கள் பார்க்கலாம் என்று மந்திரி பிரியங்க் கார்கேவுக்கு பா.ஜனதா சவால் விடுத்துள்ளது.
பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ஆவேசமாக பேசுகிறார்
துணை முதல்-மந்திரி பதவி அரசியல் சாசன பதவி அல்ல. கட்சிகள் தான் இந்த பதவியை வழங்குகின்றன. அரசு ஆலோசனை கூட்டங்களில் முதல்-மந்திரி பேசுவதற்கு முன்னரே துணை முதல்-மந்திரி பேசுகிறார். புதிய அரசு வரும்போது, முதல்-மந்திரி அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து பேசுவது வழக்கம். ஆனால் புதிய ஆட்சியில் முதல்-மந்திரி அமைதியாக உள்ளார். துணை முதல்-மந்திரி ஆவேசமாக பேசுகிறார்.
அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் இந்து அமைப்பினருக்கு அவர் மிரட்டல் விடுக்கிறார். மிரட்டுவது என்பது அவரது வழக்கம். காங்கிரஸ் 5 உத்தரவாத வாக்குறுதிகளை அளித்துவிட்டு அதை நிறைவேற்றவில்லை. இது கர்நாடக மக்களுக்கு செய்த மிகப்பெரிய அவமானம். காங்கிரஸ் அரசு அமைந்து 24 மணி நேரத்தில் உத்தரவாத வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக காங்கிரஸ் தலைவர்கள் உறுதியளித்தனர்.
அவமானம் இல்லையா?
ஆனால் 240 மணி நேரம் ஆகியும் அந்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை. முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இலாகா உத்தரவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். வழியில் செல்பவர்களுக்கு எல்லாம் உத்தரவாத வாக்குறுதிகளை கொடுக்க முடியுமா? என்று மந்திரிகள் சொல்கிறார்கள். இது மக்களுக்கு இழைக்கப்படும் அவமானம் இல்லையா?.
அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம் என்று டி.கே.சிவக்குமார் கூறினார். ஆனால் இப்போது அரசின் நிதி நிலை குறித்து மந்திரிகள் பேசுகிறார்கள். 13 முறை பட்ஜெட் தாக்கல் செய்த சித்தராமையாவுக்கு இதுகுறித்து முன்பே ஞானம் இருக்கவில்லையா?. இதை பார்த்து மக்கள் சிரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்குவதாக காங்கிரஸ் கூறியது. இப்போது அதற்கு கட்டுப்பாடுகளை விதிப்பதாக சொல்கிறார்கள்.
தடை விதியுங்கள்
இந்த விஷயத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப மந்திரி பிரியங்க் கார்கே, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை விதிப்பதாக சொல்கிறார். இதை யாராலும் செய்ய முடியாது. தைரியம் இருந்தால் அந்த அமைப்புக்கு தடை விதியுங்கள் பார்க்கலாம். புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா கலந்து கொள்வது வரவேற்புக்குரியது. ஊழல் வழக்குகளில் ஜாமீனில் இருப்பவர்கள் பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசுகிறார்கள்.
இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.