தனியார் பஸ்-ஜீப் மோதல்; 3 பேர் பலி
|கல்கட்டகி அருகே தனியார் பஸ்-ஜீப் மோதி கொண்ட விபத்தில் 3 பேர் பலியானார்கள். மேலும் ஒருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
உப்பள்ளி;
தார்வார் மாவட்டம் உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த உத்தரகன்னடாவை சேர்ந்தவர் உயிரிழந்தார். அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல உத்தர கன்னடா மாவட்டம் அலியாலா பகுதியில் இருந்து 4 பேர் ஜீப்பில் நேற்றுமுன்தினம் உப்பள்ளி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, கல்கட்டகி தாலுகா ராம்னாலா கிராஸ் அருகே வந்தபோது அதே சாலையில் எதிரே வந்த தனியார் பஸ் ஒன்று ஜீப் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஜீப் சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஜீப்பில் வந்தவர்களில் சிவனகவுடா(வயது 26) மற்றும் அம்ருத் படேல்(32) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் ஜீப்பை ஓட்டி வந்த மாருதி மற்றும் தேவேந்திரா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்களை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி மாருதியும் உயிரிழந்தார். இதுகுறித்து கல்கட்டகி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.