பஞ்சாபில் சிறைக்குள் பிறந்த நாள் பார்ட்டி நடத்தி வீடியோ வெளியிட்ட கைதிகள்: போலீஸ் விசாரணை
|வீடியோ எடுப்பதற்காக பயன்படுத்தப்பட்ட செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா மத்திய சிறைக்குள், கைதிகள் சிலர் சக கைதியின் பிறந்தநாளை கொண்டாடுவது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர்.
இதன்படி, சம்பந்தபட்ட வீடியோ காட்சியில் மணி ராணா என்ற கைதியின் பிறந்தநாளை சக கைதிகள் கொண்டாடியது தெரிய வந்தது. இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த மணி ராணா, கடந்த 2019-ம் ஆண்டு திருட்டு வழக்கில் கைதாகி லூதியானா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி, வீடியோ எடுப்பதற்காக பயன்படுத்தப்பட்ட செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மணி ராணா உள்பட 11 கைதிகள் மீது சிறை விதிகள் 52-ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.