< Back
தேசிய செய்திகள்
பிரதமர் மோடி நாளை பெங்களூரு வருகை
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி நாளை பெங்களூரு வருகை

தினத்தந்தி
|
25 Aug 2023 3:43 AM IST

சந்திரயான்-3 திட்டம் வெற்றியால் உற்சாகம் அடைந்துள்ள பிரதமர் மோடி நாளை (சனிக்கிழமை) பெங்களூரு வருகை தந்து இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் பாராட்டுகிறார்.

பெங்களூரு:

சந்திரயான்-3 திட்டம் வெற்றியால் உற்சாகம் அடைந்துள்ள பிரதமர் மோடி நாளை (சனிக்கிழமை) பெங்களூரு வருகை தந்து இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் பாராட்டுகிறார்.

சந்திரயான்-3 திட்டம் வெற்றி

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இயங்கி வரும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.அந்த விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நேற்று முன்தினம் நிலவின் தென்துருவ தரை பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் நிலவில் தடம் பதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தை பிடித்துள்ளது. அத்துடன் நிலவின் தென்துருவத்தில் ஆய்வு மேற்கொள்ளும் முதல்நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முதல்-மந்திரி சித்தராமையா உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மேலும் கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நேற்றுமுன்தினம் இரவே இஸ்ரோ விண்கல கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்று, இஸ்ரோ தலைவர் சோம்நாத், சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் மற்றும் விஞ்ஞானிகளுக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.

பிரதமர் மோடி நாளை வருகை

இதற்கிடையே நிலவில் சந்திரயான் தரையிறங்கி ஆய்வு பணியை மேற்கொண்டு வருவதால் பிரதமர் மோடி மிகுந்த உற்சாகத்தில் உள்ளார். எனவே இதற்கு காரணமான இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் பாராட்ட முடிவு செய்துள்ளார். ஆனால் தற்போது அவர் தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் உள்ளார்.

பிரதமர் மோடி நாளை (சனிக்கிழமை) நாடு திரும்புகிறார். அவர் டெல்லி செல்லாமல் தென்ஆப்பிரிக்காவில் இருந்து நேராக பெங்களூரு வருகிறார். அவர் அதிகாலை 5 மணிக்கு பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார். அங்கு அவருக்கு பா.ஜனதா சார்பில் சுமார் 5 ஆயிரம் பேருடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பிறகு அவர் அங்கு காலை 6.30 மணி வரை ஓய்வு எடுக்கிறார். அதன் பிறகு மோடி அங்கிருந்து புறப்பட்டு பீனியாவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு வருகிறார். அங்கு அவா் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு திறந்தவெளி வாகனத்தில் பேரணி நடத்தி மக்களை பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியபடி இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு செல்கிறார்.

டெல்லி செல்கிறார்

அங்கு சந்திரயான்-3 விண்கலத்தை உருவாக்கி வெற்றி பெற செய்த விஞ்ஞானிகளை அவர் தனித்தனியாக பாராட்டுகிறார். பின்னர் விஞ்ஞானிகள் மத்தியில் பேசுகிறார்.

சுமார் 1½ மணி நேரம் அங்கு இருக்கும் மோடி பிறகு காலை 8.30 மணியளவில் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்யத்தொடங்கியுள்ளனர்.

வாகன பேரணி

இதுதொடர்பாக பா.ஜனதா முன்னாள் மந்திரி ஆர்.அசோக் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நிலவில் சந்திரயானை தரையிறக்கி இந்தியா சரித்திர சாதனை படைத்துள்ளது. இதற்கு காரணமான இஸ்ேரா விஞ்ஞானிகளை நேரில் பாராட்ட பிரதமர் மோடி 26-ந் தேதி (நாளை) பெங்களூரு வருகிறார். எச்.ஏ.எல். விமான நிலையத்தில் நாங்கள் 5 ஆயிரம் பேரை திரட்டி வரவேற்க உள்ளோம்.

அங்கு மோடி உரையாற்றுகிறார். இஸ்ரோ கட்டுப்பாட்டு மையம் அமைந்துள்ள பீனியாவில் பிரதமர் மோடி வாகன பேரணி மேற்கொள்ள உள்ளார். இது ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி எங்கள் கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து நாங்கள் ஆலோசனை நடத்தியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சித்தராமையா நேரில் வாழ்த்து

இதற்கிடையே கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா நேற்று பீனியாவில் உள்ள இஸ்ரோவின் விண்கல தரைகட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்றார். அங்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்பட விஞ்ஞானிகளுக்கு அவர் மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் அவர்களுக்கு இனிப்பும் ஊட்டி பாராட்டு தெரிவித்தார். மேலும் விஞ்ஞானிகள் அனைவரும் அவருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

மேலும் செய்திகள்