பிரதமர் மீதான அதீத அன்பால் பாதுகாப்பு வளையத்தையும் மீறி அவரிடம் சென்றேன்; சிறுவன் நெகிழ்ச்சி
|பிரதமர் மோடி கடவுள் போன்றவர் என்றும், அவர் மீதான அதீத அன்பால் பாதுகாப்பு வளையத்தையும் மீறி அவரிடம் சென்றதாகவும் பிரதமர் மோடியிடம் சென்ற சிறுவன் கூறினான்.
உப்பள்ளி:
பிரதமர் மோடி கடவுள் போன்றவர் என்றும், அவர் மீதான அதீத அன்பால் பாதுகாப்பு வளையத்தையும் மீறி அவரிடம் சென்றதாகவும் பிரதமர் மோடியிடம் சென்ற சிறுவன் கூறினான்.
தடுப்பையும் மீறி...
தேசிய இளைஞர் திருவிழாவை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நேற்று முன்தினம் உப்பள்ளிக்கு வருகை தந்தார். அவர் உப்பள்ளி விமான நிலையத்தில் இருந்து உப்பள்ளி டவுன் பகுதி வரை 'ரோடு ஷோ' செய்தார். அப்போது அவர் காரின் கதவை திறந்தவைத்து நின்றபடி பொதுமக்களை பார்த்து கையசைத்தார். சாலையின் இருபுறங்களிலும் பா.ஜனதா தொண்டர்கள் உள்பட பலரும் நின்று பிரதமரை வரவேற்றனர். இதற்காக இருபுறங்களிலும் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் கூட்டத்தில் நின்ற சிறுவன் ஒருவன், திடீரென இரும்பு தடுப்பை தாண்டி பாதுகாப்பு வளையத்தையும் மீறி ஓடி வந்து பிரதமர் மோடிக்கு மிக அருகில் செல்ல முயன்றான்.
அப்போது சுதாரித்து கொண்ட பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் சிறுவனை மறித்து தடுத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுவன் தொரவிஹெக்கலா பகுதியை சேர்ந்தவன் என்பதும், அவனது பெயர் குணல் தொங்கடி(வயது 12) என்பதும் தெரிந்தது.
அதீத அன்பு
இதுகுறித்து சிறுவன் கூறுகையில் பல தகவல்கள் வெளிவந்தன. அதாவது சிறுவனும், அவனது குடும்பத்தினரும் தீவிர இந்துத்துவா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீது பற்று கொண்டவர்கள் என தெரிந்தது. பிரதமர் மோடி மீது அதீத அன்பும், பாசமும் சிறுவன் கொண்டுள்ளான். சிறுவன் 8 வயதாக இருந்தபோது பிரதமர் மோடி, உப்பள்ளிக்கு வந்துள்ளார். அப்போது அவனால் பிரதமரை காண முடியவில்லை.
தற்போது பிரதமர் வருவதை அறிந்த சிறுவன் எப்படியாவது, பிரதமரை சந்தித்துவிட வேண்டும் எனவும், அவருக்கு பூ மாலை அணிந்துவிட வேண்டும் என்றும் மிகுந்த ஆர்வத்தில் இருந்துள்ளான். இதற்காக சிறுவன் தனது மாமா, தாத்தா உள்ளிட்டோருடன் பிரதமர் வரும் வழியில் நின்று உள்ளான்.
பிரதமரின் கைவிரல்
அந்த சமயத்தில் பிரதமர் காரில் நின்றபடி கையசைத்து சென்றது, அவனுக்குள் உத்வேகத்தை ஏற்படுத்தியது. தான் என்ன செய்கிறோம் என்று தெரியாத நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி அவன் பிரதமருக்கு மாலை அணிவிக்க முயன்றுள்ளான் என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவன் கூறுகையில், எனது பிரியமான பிரதமர் மோடியை நான் நேரில் கண்டுவிட்டேன். அவர் எனக்கு கடவுள் போன்றவர்.
அவருக்கு மாலை அணிவிக்க முயன்றேன். ஆனால் போலீசார் என்னை தடுத்துவிட்டனர். எனினும், பிரதமரின் கைவிரல் என்மீது பட்டுவிட்டது. எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றான். எனினும் பிரதமரின் பாதுகாப்பு விஷயம் என்பதால் உப்பள்ளி போலீசார் இதனை தீவிரமாக எடுத்து சிறுவனின் குடும்பத்தினரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.