ஜி20 அமைப்பு - புதிய லோகோ வெளியீடு
|இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்திற்கான லோகோ, இணையதளத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
புதுடெல்லி,
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்திற்கான லோகோ, கருப்பொருள் மற்றும் இணையதளத்தை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார். வரும் டிசம்பர் 1 முதல் ஜி20 அமைப்பின் தலைமையை இந்தியா ஏற்கவுள்ள நிலையில் புதிய லோகோ வெளியிடப்பட்டுள்ளது.
விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-
இந்தியா ஜி20 அமைப்பின் தலைமையை ஏற்க இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 'வசுதைவ் குடும்பகம்', உலகத்தின் மீது இந்தியா காட்டும் கருணையின் அடையாளம். உலகை ஒன்றிணைத்து கொண்டு வரும் இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் நம்பிக்கையை லோகோவில் உள்ள தாமரை குறிக்கிறது.
சுதந்திரத்திற்குப் பிறகு, வளர்ச்சியின் உச்சத்தை நோக்கிய பயணத்தைத் தொடங்கினோம், அதில் கடந்த 75 ஆண்டுகளில் அனைத்து மாநிலங்களின் முயற்சிகளும் அடங்கும். ஜி20 இல் ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் என்ற எங்களது மந்திரம் உலக நலனுக்கான பாதையை அமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.