கங்கை நதியில் பிரதமர் மோடி வழிபாடு
|கங்கை நதியின் தத்துப்பிள்ளைநான் என்று பிரதமர் மோடி உருக்கமாக கூறினார்.
வாரணாசி,
7 கட்டங்களாக நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் 4 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. இன்னும் 3 கட்ட தேர்தல் நடக்க உள்ளது. இதற்காகப் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் 3-வது முறையாக பிரதமர் மோடி போட்டியிடுகிறார். வருகிற ஜூன் 1-ந்தேதி, 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலின்போது இந்த தொகுதிக்கான வாக்கு பதிவானது நடைபெறுகிறது. இதில், வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியமைக்கும் முனைப்பில் அவர் உள்ளார். இதற்காக வாரணாசி நகரில் பிரதமர் மோடி நேற்று வாகன பேரணியில் ஈடுபட்டார். இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இன்று பிற்பகலில் பிரதமர் மோடி தாக்கல் செய்ய உள்ளார்.
இந்தநிலையில், கங்கை நதியில் சிறப்பு பூஜைகள் நடத்தினார். வேத பட்டர்கள் மந்திரம் ஓத, பிரதமர் மோடி கங்கை நதியில் மலர்கள் தூவி வணங்கினார். தொடர்ந்து ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கங்கை நதியின் புனிதத்தை எடுத்து கூறினார்.
பிரதமர் மோடி கூறியதாவது:
கங்கை நதியின் தத்துப்பிள்ளைநான். எனது தாய் மறைவுக்குப்பின் கங்கை குறித்து மிக நெருக்கமாக உணர்கிறேன். கங்கை என்னை வலுப்படுத்தி தேற்றியது. கங்கை நதி தாயை போல் அனைவரையும் காக்கிறது என்றார். தாயை குறித்து பேசும் போது பிரதமர் மோடி கண்கள் கலங்கின. அவரது குரல் தழு தழுத்தது. மேலும்,140 கோடி மக்களுக்காக நான் உழைக்கிறேன். இது கடவுள் உத்தரவு என்று கூறினார்.