எகிப்து அதிபருக்கு ஜனாதிபதி மாளிகையில் உற்சாக வரவேற்பு
|டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் எகிப்து அதிபர் அல் சிசிக்கு திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
புதுடெல்லி,
இந்திய திருநாட்டின் 74-வது குடியரசு தின விழா, இந்த ஆண்டு கொரோனா தொற்றை கட்டுப்படுத்திய நிலையில், நாளை மிகுந்த எழுச்சியுடனும், கோலாகலத்துடனும் நடைபெறுகிறது. டெல்லியில் நடைபெறும் விழாவுக்கான ஏற்பாடுகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளன. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி (வயது 68) அழைக்கப்பட்டார். நமது நாட்டின் குடியரசு தின விழாவுக்கு எகிப்து அதிபர் ஒருவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கலந்துகொள்வது இதுவே முதல் முறை ஆகும். அது மட்டுமின்றி குடியரசு தின அணிவகுப்பில் எகிப்து படைப்பிரிவும் கலந்துகொள்கிறது.
இந்தநிலையில் டெல்லியில் நாளை (26-ந் தேதி) 74-வது குடியரசு தின விழா நடைபெறுகிறது. இதில் ஏறத்தாழ 65 ஆயிரம் பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டில் தலைநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
குடியரசு தின விழாவில் கலந்துகொள்வதற்காக எகிப்து அதிபர் சிசி 3 நாள் பயணமாக நேற்று டெல்லி வந்த நிலையில்,இன்று காலை ஜனாதிபதி மாளிகைக்கு வந்த பத்தா எல்- சிசிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியுடன் பத்தா எல்-சிசிக்கு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இச்சந்திப்பின்போது, வேளாண்மை, எண்மம் (டிஜிட்டல்), வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு உறவை மேம்படுத்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதிபர் எல்- சிசியை வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
அரபு-ஆப்பிரிக்க நாடுகளின் அரசியலில் முக்கியப் பங்கு வகித்து வரும் எகிப்துடன் நட்புறவை மேம்படுத்த இந்தியாஆர்வம் காட்டி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகமும் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக கடந்த 2021-22 நிதியாண்டில் இருதரப்பு வர்த்தகம் 712 கோடி டாலராக (சுமார் ரூ.58,122 கோடி) இருந்தது என வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.