பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்
|பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை 26 பதக்கங்கள் பெற்று பதக்கப் பட்டியலில் 14-வது இடத்தில் உள்ளது.
புதுடெல்லி,
மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கிய பாரா ஒலிம்பிக் தொடர் வருகிற 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த தொடரில் இந்தியா இதுவரை 6 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என 26 பதக்கங்கள் பெற்று பதக்கப் பட்டியலில் 14-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
பதக்கம் வென்ற ஹர்விந்தர் சிங், கபில் பர்மார், பிரணவ் சூர்மா, சச்சின் சர்ஜிராவ் கிலாரி மற்றும் தரம்பிர் ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். பதக்கம் வெல்லும் வீரர்கள் நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு என்று கூறிய பிரதமர் மோடி, வீரர்களின் இத்தகைய அற்புதமான செயல்களுக்கு பின்னால் உள்ள பயிற்சியாளர்களின் முயற்சிகளை பாராட்டினார்.