மகர சங்கராந்தி: பசுக்களை உச்சி முகர்ந்து உணவளித்த பிரதமர் மோடி - வீடியோ வைரல்
|இந்தியாவின் பல பகுதிகளிலும் தை ஒன்றாம் நாள், மகர சங்கராந்தி, மகா பிஹு என பல பெயர்களில் கொண்டாடப்படுகிறது.
புதுடெல்லி,
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ம் தேதியான நாளை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி பலரும் தங்களது அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். அதன்படி, டெல்லியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் வீட்டில் இன்று காலையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
தமிழர்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் கரகாட்டம், சிலம்பாட்டம், பாடல் பாடுதல், பறையாட்டம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழாவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இந்தநிலையில், மகர சங்கராந்தியை முன்னிட்டு தனது இல்லத்தில் பசுகளுக்கு புல் மற்றும் உணவுகளை வழங்கினார் பிரதமர் மோடி. டெல்லியில் உள்ள தனது இல்லத்தில், ஏராளமான பசுக்களுக்கு உணவளித்து பிரதமர் மோடி மகிழ்ந்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை எனக்கொண்டாடப்படும் அறுவடைத் திருநாளைப் போல, இந்தியாவின் பல பகுதிகளிலும் தை ஒன்றாம் நாள், மகர சங்கராந்தி, மகா பிஹு என பல பெயர்களில் கொண்டாடப்படுகிறது. விவசாயம் செழிக்கச் செய்யும் சூரியக் கடவுளை வணங்கும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.