போலந்து, உக்ரைன் பயணத்தை முடித்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி
|தனி விமானம் மூலம் டெல்லி பாலம் விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை அதிகாரிகள் வரவேற்றனர்.
புதுடெல்லி,
ஐரோப்பிய நாடான உக்ரைனுடன் கடந்த 1992-ம் ஆண்டு முதல் இந்தியா தூதரக உறவுகளை பேணி வருகிறது. அந்த நாடு மீது கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா போர் தொடுத்தது. 2½ ஆண்டுகளை கடந்து நீடித்து வரும் இந்த போர் குறித்து இந்தியா கவலையை வெளியிட்டு வருகிறது.
இரு நாடுகளும் போரை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் மோதலுக்கு தீர்வு காண வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக இரு நாட்டு தலைவர்களிடமும் அவர் நேரிலும் வலியுறுத்தி இருந்தார்.இந்த நிலையில் இத்தாலியில் கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடியை சந்தித்த ஜெலன்ஸ்கி, அவரை உக்ரைன் வருமாறு அழைப்பு விடுத்தார். இதை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.
அதன்படி போலந்து, உக்ரைன் நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். இதற்காக கடந்த 22-ந் தேதி புறப்பட்டு போலந்து சென்ற அவர், அங்கே 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதையடுத்து, ரயில் மூலமாக உக்ரைனுக்கு சென்றார். அங்கு உக்ரைன் அதிபரை சந்தித்து பேசினார். உக்ரைன் அதிபருடனான சந்திப்பின் போது, பிராந்தியத்தில் அமைதி திரும்ப இந்தியா உதவும் என உறுதி அளித்தார். இந்த நிலையில், போலந்து, உக்ரைன் பயணத்தை நிறைவு செய்து பிரதமர் மோடி இன்று நாடு திரும்பினார். தனி விமானம் மூலம் டெல்லி பாலம் விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை அதிகாரிகள் வரவேற்றனர்.