ஒவ்வொருவரும் தங்களது தாயாரின் பெயரில் மரக்கன்று நட வேண்டும் - பிரதமர் மோடி வலியுறுத்தல்
|இந்த மாதம் 10வது யோகா தினத்தை உலக நாடுகள் முழு உற்சாகத்துடன் கொண்டாடியதாக பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலியில் மன் கீ பாத் என்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அவர் கடைசியாக பிப்ரவரி 25-ந்தேதி மன் கீ பாத்தில் பேசி இருந்தார். அதன்பின் மக்களவை தேர்தல் நடைமுறை அமல்படுத்தப்பட்டதால் உரையாற்றவில்லை. தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று 3-வது முறையாக பிரதமர் பதவியை ஏற்ற மோடி இன்று 111-வது மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உங்களை மீண்டும் சந்திப்பேன் என்று பிப்ரவரியில் கூறி இருந்தேன். இன்று மீண்டும் மன் கீ பாத் நிகழ்ச்சியுடன் உங்கள் மத்தியில் இருக்கிறேன். நமது அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நாட்டின் ஜனநாயக அமைப்பின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்தியதற்காக நாட்டு மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
2024 மக்களவைத் தேர்தல் உலகின் மிகப்பெரிய தேர்தல். 65 கோடி மக்கள் வாக்களித்தனர். உலகின் எந்த நாட்டிலும் இவ்வளவு பெரிய தேர்தல் நடந்ததில்லை. தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் நடைமுறையில் தொடர்புடைய அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தன்று தாயின் பெயரில் ஒரு மரம் என்ற சிறப்பு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. நான் எனது தாயின் பெயரில் ஒரு மரத்தை நட்டுள்ளேன். நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் தாயுடன் சேர்ந்து அல்லது அவரது பெயரில் ஒரு மரத்தை நடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அடுத்த மாதம் இந்த நேரத்தில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி இருக்கும். ஒலிம்பிக்கில் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்த நீங்கள் அனைவரும் காத்திருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். டோக்கியோவில் நமது வீரர்களின் ஆட்டம் ஒவ்வொரு இந்தியரின் மனதையும் வென்றது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து, நமது விளையாட்டு வீரர்கள் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு முழு மனதுடன் தயாராகி வருகின்றனர். வீரர்- வீராங்கனைகளை ஊக்குவிக்க சீயர்4பாரத் என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்துமாறு மக்களை வலியுறுத்துகிறேன்.
இந்தியாவின் பல தயாரிப்புகள் உலகம் முழுவதும் பெரும் தேவையுடன் உள்ளன. அத்தகைய தயாரிப்புகளில் ஒன்று அரக்கு காபி. ஆந்திராவின் அல்லூரி சீதாராம் ராஜு மாவட்டத்தில் அரக்கு காபி அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது அதன் வளமான சுவை மற்றும் நறுமணத்திற்காக பிரபலமாக உள்ளது.
சுமார் 1.5 லட்சம் பழங்குடியின குடும்பங்கள் அரக்கு காபி சாகுபடியுடன் தொடர்புடையவை. ஒரு முறை விசாகப்பட்டினத்தில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுடன் இந்த காபியை ருசிக்கும் வாய்ப்பு கிடைத்தது நினைவிருக்கிறது. அரக்கு காபி பல உலகளாவிய விருதுகளைப் பெற்று உள்ளது. டெல்லியில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டிலும் இந்த காபி பிரபலமாக இருந்தது.
கேரள கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சடங்குகளில் குடைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. கேரளாவின் அட்டப்பாடியில் தயாராகும்‛கார்தும்பி குடைகள்' சிறப்பு வாய்ந்தவை. இந்த குடைகளை கேரளாவைச் சேர்ந்த பழங்குடியின சகோதரிகள் தயாரிக்கின்றனர். இன்று இந்த குடைகளின் தேவை அதிகரித்து வருகிறது. ஆன்லைன் மூலமும் விற்பனை செய்யப்படுகிறது. இவர்கள் குடைகளை மட்டும் விற்கவில்லை. அவர்களது பாரம்பரியத்தை உலகம் முழுவதும் அறிமுகம் செய்கின்றனர்.
காஷ்மீர் மக்களும், தங்கள் பகுதியில் உற்பத்தி ஆகும் பொருட்களை சர்வதேச அளவில் பிரபலப்படுத்துவதில் முன்னிலை வகிக்கின்றனர். காஷ்மீரை சேர்ந்த அப்துல் ரஷீத் மிர் என்ற விவசாயி, தனது நிலம் மற்றும் அக்கம் பக்கத்தினர் அறுவடை செய்யும் பட்டாணியை லண்டனுக்கு ஏற்றுமதி செய்கிறார். பொது மக்களும் , இதுபோன்ற திட்டங்கள் குறித்து ,#myproductsmypride என்ற ஹேஷ்டாக்கில் என்னிடம் பகிருங்கள்.
குவைத் நாட்டு தேசிய வானொலியில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அரை மணி நேரம், நமது நாட்டின் கலாச்சாரம் குறித்த நிகழ்ச்சி இந்தியில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. நமது திரைப்படங்கள், கலை ஆகியவை அங்கு வசிக்கும் இந்திய சமூகத்தினர் மத்தியில் பிரபலம். இதன் மீது அந்நாட்டு மக்களும் ஆர்வம் காட்ட துவங்கி உள்ளனர். இதனை முன்னெடுத்த குவைத் அரசுக்கும், மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் கலாச்சாரம் இன்று உலகம் முழுவதும் பெருமை பெற்று வருவதைக் கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். துர்க்மெனிஸ்தானில், அந்நாட்டு தேசிய கவிஞரின் 300வது ஆண்டு தினம் அனுசரிக்கப்பட்டது. அன்றைய தினம் உலகில் தலைசிறந்த 24 கவிஞர்களின் சிலை திறந்து வைக்கப்பட்டது. அதில் ரவீந்திரநாத் தாகூரின் சிலையும் ஒன்று.
இந்த மாதம் 10வது யோகா தினத்தை உலக நாடுகள் முழு உற்சாகத்துடன் கொண்டாடின. சவுதி அரேபியாவில் அல் ஹனாப் சாத் என்ற பெண் தலைமையில் யோகா நிகழ்ச்சி நடந்தது. சவுதி பெண் ஒருவர் யோகா நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று நடத்தியது இது முதல்முறை. நைல் நதிக்கரையோரம், செங்கடல் பகுதி பிரமீடு அருகே லட்சக்கணக்கான மக்கள் யோகாவில் ஈடுபட்டனர். இலங்கை, அமெரிக்கா, பூடான், நாடுகளிலும் யோகா தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.