பிரதமர் மோடி வருகையால் மாநகராட்சிக்கு ரூ.9 கோடி செலவு
|பிரதமர் மோடியின் ஒரு நாள் பெங்களூரு பயணத்திற்காக மாநகராட்சி ரூ.9 கோடி செலவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
பெங்களூரு:
ரூ.9 கோடி செலவு
பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் பெங்களூருவில் ஒருநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். சிட்டி ரெயில் நிலையம், விதானசவுதா, தேவனஹள்ளி விமான நிலையத்திற்கு பிரதமர் சென்றிருந்தார். பிரதமர் வருகையால், அவர் செல்லும் சாலைகள் புதிதாக போடப்பட்டது. சாலை தடுப்பு சுவர்கள் வர்ணம் பூசப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இரும்பு தகடுகள் வைக்கப்பட்டது. பிரதமர் மோடி சென்ற பகுதிகள், சாலைகள் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது.
இந்த நிலையில், பிரதமரின் ஒருநாள் பெங்களூரு வருகைக்காக மாநகராட்சி ரூ.9 கோடிக்கும் மேல் செலவு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. பிரதமர் மோடி பயணம் செய்த சாலைகளில் இரும்பு தகடுகள், இரும்பு வேலிகள் அமைப்பதற்காக மட்டும் ரூ.3 கோடியை மாநகராட்சி அதிகாரிகள் செலவு செய்திருந்தார்கள்.
மாநகராட்சி மீது குற்றச்சாட்டு
இதுதவிர 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைத்தல் பணிகளை மேற்கொண்டு இருந்தது. மேலும் தடுப்பு சுவர்களில் வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளும் செய்யப்பட்டு இருந்தது. இதற்காக ரூ.4 கோடியை மாநகராட்சி அதிகாரிகள் செலவு செய்திருந்தார்கள். இதுபோல், மற்ற பணிகளுக்காக ரூ.2 கோடி செலவு செய்யப்பட்டு இருந்தது. ஒட்டுமொத்தமாக ரூ.9 கோடியை மாநகராட்சி செலவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. பிரதமர் செல்லும் பகுதிகளில் சாலைகள் அழகாகவும், காரில் செல்லும் போது அனைத்து பகுதிகளும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று மாநகராட்சிக்கு அரசு உத்தரவிட்டு இருந்ததாக தெரிகிறது.
இதன்காரணமாக தான் சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.9 கோடியை மாநகராட்சி செலவு செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் சிட்டி ரெயில் நிலையம் முன்பாக உள்ள சாலையில் கான்கிரீட் ரோடு போட மாநகராட்சி முடிவு செய்து நிதி ஒதுக்கி இருந்தது. அந்த சாலை வழியாகவும் பிரதமர் செல்வார் என்று கூறபட்டதால், அவசரம் அவசரமாக தார் சாலை போட்டு மக்கள் வரி பணத்தை மாநகராட்சி வீணடித்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.