கங்கா விலாஸ் சொகுசு கப்பலை வரும் 13-ந்தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
|பிரதமர் மோடி வாரணாசியில் இருந்து கங்கா விலாஸ் என்ற சொகுசு கப்பலை வருகிற 13-ந்தேதி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
வாரணாசி,
பிரதமர் மோடி கங்கா விலாஸ் என்ற சொகுசு கப்பலை வாரணாசியில் இருந்து வருகிற 13-ந்தேதி மெய்நிகர் காட்சி வழியே கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த கப்பலானது வாரணாசியில் புறப்பட்டு பாட்னா நகரை சென்றடைந்து, பின்னர் கொல்கத்தாவுக்கு செல்லும்.
அதன்பின்பு வங்காளதேசத்திற்கு புறப்பட்டு சென்று மீண்டும் இந்தியாவுக்கு திரும்பும். இதன் பயணம் அசாமின் திப்ரூகார் நகரில் முடிவடையும். 80 பயணிகள் பயணிக்க கூடிய அளவுக்கு கொள்ளளவை கொண்டது இந்த கப்பல்.
இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, பல்வேறு உலக பாரம்பரிய தலங்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நின்று செல்லும். மொத்தம் 50 நாட்கள் பயணம் மேற்கொள்ளும். இந்த பயணத்தின்போது, தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள் வழியேயும் கடந்து செல்லும்.
இந்த கப்பல் மொத்தம் 4 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு பயணிக்க உள்ளது. வெளிநாட்டு பயணிகளும் இந்த சொகுசு கப்பலில் பயணம் செய்ய உள்ளனர். இந்திய சுற்றுலாவை பற்றி உலக மக்களுக்கு செய்தி அளிக்கும் வகையில், சுற்றுலாவாசிகளை கவரும் வகையில் இந்த கப்பல் பயணம் இருக்கும் என வாரணாசி நகரை சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்.