2 நாள் பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி
|இந்தியா- பூடான் நல்லுறவை மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.
புதுடெல்லி,
2 நாள் பயணமாக இன்று காலை பூடான் நாட்டுக்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். இந்தப் பயணத்தின்போது, பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக் மற்றும் பூடானின் நான்காவது மன்னர் ஜிக்மே சிங்கே வாங்சுக் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கேவுடனும் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
மேலும் இந்தியா- பூடான் நல்லுறவை மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி, பூடான் முழுவதும் சுவரொட்டிகள் மற்றும் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இருதரப்பு மற்றும் பிராந்திய விஷயங்களில் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும், மக்களின் நலனுக்காக நமது முன்மாதிரியான கூட்டாண்மையை விரிவுபடுத்தி தீவிரப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கவும் இந்தப் பயணம் ஒரு வாய்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.