நகரில் சாலைகள் சீராக இருக்க பிரதமர் மோடி மாதம் ஒருமுறை பெங்களூருவுக்கு வரவேண்டும்; ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தல்
|நகரில் சாலைகள் சீராக இருக்க பிரதமர் மோடி மாதம் ஒருமுறை பெங்களூருவுக்கு வரவேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தி உள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு விமான நிலையத்தில் கெம்பேகவுடா சிலை திறப்பு, 2-வது முனையம் திறப்பு மற்றும் வந்தேபாரத் ரெயில் சேவை தொடக்கம் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க மோடி நேற்று பெங்களூருவுக்கு வந்தார். பிரதமர் வருகையையொட்டி பெங்களூரு விமான நிலைய சாலை, ரெயில் நிலைய சாலை மற்றும் பிரதமர் மோடி பயணிக்கும் சாலை சீரமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையம் முன்பு பிரதமர் மோடி வருவதற்கு முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியதுடன், பதாகைகளையும் கையில் வைத்திருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ஆம் ஆத்மி கட்சியினரை கைது செய்து அங்கிருந்து அழைத்து சென்றனர்.
முன்னதாக ஆம் ஆத்மி கட்சியினர் கூறுகையில், 'பிரதமர் மோடி வருகையையொட்டி அவர் பயணிக்கும் சாலைகளை மட்டும் அவசர, அவசரமாக மாநில அரசும், மாநகராட்சியும் சீரமைத்துள்ளது. மக்கள் மீது அரசுக்கு அக்கறை இல்லை. வாகன ஓட்டிகள் சாலை பள்ளங்களால் விபத்தில் சிக்குகிறார்கள். மோடி வருகிறார் என்பதற்காக சாலையை சீரமைத்து வருகிறார்கள். இந்த சாலைகள் இன்னும் ஒரு மாதத்தில் பெயர்ந்து சேதமடைந்து விடும். இதனால் பிரதமர் மோடி மாதம் ஒருமுறை பெங்களூருவுக்கு வந்து செல்ல வேண்டும்' என்றனர்.