< Back
தேசிய செய்திகள்
அருணாசலபிரதேசத்தை சொந்தம் கொண்டாடி வெளியிடப்பட்ட சீனாவின் வரைபடம் பற்றி பிரதமர் மோடி பேச வேண்டும் - ராகுல்காந்தி வலியுறுத்தல்
தேசிய செய்திகள்

அருணாசலபிரதேசத்தை சொந்தம் கொண்டாடி வெளியிடப்பட்ட சீனாவின் வரைபடம் பற்றி பிரதமர் மோடி பேச வேண்டும் - ராகுல்காந்தி வலியுறுத்தல்

தினத்தந்தி
|
31 Aug 2023 1:57 AM IST

அருணாசலபிரதேசத்தை சொந்தம் கொண்டாடி வெளியிடப்பட்ட சீனாவின் புதிய வரைபடம் பற்றி பிரதமர் மோடி பேச வேண்டும் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

இந்தியாவுடன் நீண்ட காலமாக சீனா எல்லை தகராறில் ஈடுபட்டு வருகிறது. இந்திய மாநிலமான அருணாசலபிரதேசம், சர்ச்சைக்குரிய அக்சாய் சின் ஆகியவற்றை சீனாவுக்கு சொந்தமானதாக காட்டும் புதிய வரைபடத்தை சீனா வெளியிட்டுள்ளது.

இதற்கு சீனாவிடம் இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, ''சீன வரைபடம், எந்த அடிப்படையும் இல்லாதது. அதை நிராகரிக்கிறோம். சீனாவின் செயல், எல்லை பிரச்சினையை மேலும் சிக்கலாக்கவே வழி செய்யும்'' என்று கூறினார்.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கர்நாடகா செல்வதற்காக டெல்லி விமான நிலையத்துக்கு வந்தார். சீன வரைபடம் பற்றி நிருபர்கள் கேட்டதற்கு ராகுல்காந்தி கூறியதாவது:-

நான் லடாக்கில் இருந்து இப்போதுதான் வந்தேன். லடாக்கில் ஒரு அங்குல நிலம் கூட பறிபோகவில்லை என்று பிரதமர் மோடி சொல்வது முற்றிலும் பொய் என்று நான் பல ஆண்டுகளாக கூறி வருகிறேன்.

சீனா நமது நிலத்தை பறிக்கொண்டுள்ளது என்பது ஒட்டுமொத்த லடாக்குக்கும் தெரியும்.

சீன வரைபடம், மிக தீவிரமான பிரச்சினை. அவர்கள் ஏற்கனவே நமது நிலத்தை பறித்துக் கொண்டு விட்டனர். எனவே, பிரதமர் மோடி, சீன வரைபடம் குறித்து பேச வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

''அருணாசலபிரதேசம், இந்தியாவின் பிரிக்க இயலாத பகுதி. சட்டவிரோதமாக வரைபடம் தயாரிப்பதால், அதை மாற்றிவிட முடியாது'' என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

மேலும் செய்திகள்