ஜி 7 உச்சி மாநாடு: இத்தாலி சென்ற பிரதமர் மோடி நாடு திரும்பினார்
|ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றிருந்த, பிரதமர் மோடி இன்று இந்தியா திரும்பினார்.
புதுடெல்லி,
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, கனடா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகள் ஜி-7 நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. அந்த அமைப்பின் தலைமை பொறுப்பு வகிக்கும் இத்தாலி, நடப்பு ஆண்டுக்கான ஜி-7 மாநாட்டை இத்தாலியில் அபுலியா பிராந்தியத்தில் உள்ள சொகுசு விடுதியில் நடத்தி வருகிறது.
இத்தாலியின் அழைப்பின்பேரில், இம்மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். ஜி-7 மாநாட்டுக்கு இடையே, மாநாட்டுக்கு வந்துள்ள பிற நாட்டு தலைவர்களான பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்களை அவர் சந்தித்து பேசினார்.ஜி 7 மாநாடு முடிந்த பிறகு இத்தாலியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி இன்று நாடு திரும்பினார்.
ஜி 7 மாநாட்டில் பங்கேற்றது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மோடி, "மாநாடு ஆக்கப்பூர்வமாக இருந்தது. தலைவர்களுடனான சந்திப்பு பயனுள்ள வகையில் அமைந்தது. எதிர்கால தலைமுறையினருக்கான சிறந்த உலகத்தை அமைப்பது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசித்தோம்" என்று பதிவிட்டுள்ளார்.