< Back
தேசிய செய்திகள்
பெங்களூரு வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; மறக்க முடியாத வரவேற்பு அளித்த மக்களுக்கு நன்றி என நெகிழ்ச்சி
தேசிய செய்திகள்

பெங்களூரு வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; 'மறக்க முடியாத வரவேற்பு அளித்த மக்களுக்கு நன்றி' என நெகிழ்ச்சி

தினத்தந்தி
|
12 Nov 2022 12:15 AM IST

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பெங்களூரு வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ‘மறக்க முடியாத வரவேற்பு அளித்த பெங்களூரு மக்களுக்கு நன்றி’ என நெகிழ்ச்சியுடன் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பெங்களூரு:

பிரதமர் மோடி வருகை

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள 108 அடி உயர கெம்பேகவுடாவின் வெண்கல சிலை திறப்பு, விமான நிலையத்தின் 2-வது முனையம் திறப்பு மற்றும் மைசூரு-சென்னை இடையிலான தென்இந்தியாவின் முதல் 'வந்தே பாரத்' அதிவிரைவு ரெயில் சேவையை தொடங்கி வைப்பது ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று பெங்களூருவுக்கு வந்தார்.

பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்துக்கு தனி விமானத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை கவர்னர் தாவர் சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, பா.ஜனதா இளைஞரணி தலைவரும், எம்.பி.யுமான தேஜஸ்வி சூர்யா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் அவர் ஹெலிகாப்டர் மூலம் மேக்ரி சர்க்கிளுக்கு சென்றார்.

உற்சாக வரவேற்பு

அவர் அங்கிருந்து கார் மூலம் சிட்டி ரெயில் நிலையத்திற்கு புறப்பட்டார். வழியில் விதான சவுதாவின் மேற்கு நுழைவு வாயில் பகுதியில் உள்ள சர்க்கிள் பகுதியில் பா.ஜனதா தொண்டர்கள் கைகளில் கட்சி கொடியுடன் குவிந்திருந்தனர்.

அவர்களை பார்த்ததும் பிரதமர் மோடி காரை நிறுத்தி கதவை திறந்து எழுந்து நின்று கைகூப்பி, தொண்டர்களை நோக்கி கைகளை அசைத்தார். அதனை தொடர்ந்து மோடி, சிட்டி ரெயில் நிலையத்திற்கு வந்தார்.

அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி விமான நிலையத்திற்கு சென்றார். செல்லும் வழியில் சிட்டி ரெயில் நிலையம் முன்பு உள்ள சர்க்கிளில் ஏராளமான பா.ஜனதா தொண்டர்கள் குழுமி இருந்தனர்.

அவர்களை கண்டதும் பிரதமர் மோடி காரில் இருந்து கீழே இறங்கி தொண்டர்களின் அருகில் சென்று உற்சாகமாக கைகளை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது தொண்டர்கள், 'மோடி... மோடி...' என்று கோஷங்களை எழுப்பி ஆரவாரம் செய்தனர். அங்கு 5 நிமிடங்கள் இருந்த மோடி பின்னர் காரில் ஏறி மேக்ரி சர்க்கிள் பகுதிக்கு சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றார்.

பெங்களூரு மக்களின் உற்சாக வரவேற்பை கண்டு பிரதமர் மோடி நெகிழ்ந்து போனார்.

பெங்களூரு மக்களுக்கு நன்றி

பெங்களூரு மக்களின் உற்சாக வரவேற்பால் நெகிழ்ந்து போன பிரதமர் மோடி, தனது டுவிட்டர் பதிவில், 'இந்த ஆற்றல்மிக்க நகரத்திற்கு வந்த எனக்கு மறக்க முடியாத வரவேற்பு அளித்த பெங்களூரு மக்களுக்கு நன்றி' என்று பதிவிட்டுள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், பிரதமர் மோடியின் பெங்களூரு வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பயணிகளுக்கு சிரமம்

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தை சுற்றிலும் உள்ள சாலைகளில் காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை 2 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மெஜஸ்டிக்கில் உள்ள பி.எம்.டி.சி. மற்றும் கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் நிலையங்களில் இருந்து பஸ்கள் நிறுத்தப்பட்டது. சில பஸ்கள் மட்டும் மாற்று பாதையில் இயக்கப்பட்டன. இதனால் பஸ் நிலையத்தில் இருந்து பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதற்கிடையே, பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ்கள் 2 மணி நேரம் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்