பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் ஒருபோதும் அரசியல் பேசியதில்லை; ஜே.பி. நட்டா புகழாரம்
|பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் ஒருபோதும் அரசியல் பேசியதில்லை என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா புகழ்ந்துள்ளார்.
குருகிராம்,
அரியானாவின் குருகிராம் நகரில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கட்சி தொண்டர்களிடையே இன்று உரையாற்றினார். அவர் பேசும்போது, 5.5 லட்சம் இடங்களில் உள்ள 10.40 லட்சம் பூத்களில் உள்ள கட்சி தொண்டர்கள் அனைவரும் பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சியை கேட்க ஆவலாக இருந்தனர்.
இந்நிகழ்ச்சி 89வது முறையாக நடந்துள்ளது. அனைத்து மன் கி பாத் நிகழ்ச்சிகளிலும், பிரதமர் மோடி ஒருபோதும் அரசியல் பேசியது இல்லை. இன்றைய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, சுற்று சூழலை பற்றி பேசினார். அதன்பின்பு தூய்மையை பற்றி பேசினார். நாட்டை வலிமைப்படுத்துவதற்கு இந்திய மக்கள் எப்படி முயற்சி செய்து வருகின்றனர் என்பது பற்றியும் விவாதம் நடத்தினார்.
அவற்றுடன், கிராமத்திற்கு குடிநீர் வழங்குவதற்கான முயற்சிகளை பற்றியும் ஆலோசனை மேற்கொண்டார் என நட்டா குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மனதின் குரல் (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
அதன்படி, இந்த மாதத்திற்கான மனதின் குரல் (மன் கி பாத்) வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11.00 மணிக்கு தொடங்கியது. இது 89வது மனதின் குரல் நிகழ்ச்சியாகும்.
பிரதமர் மோடியின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சி ஏ.ஐ.ஆர். நியூஸ், டி.டி. நியூஸ், பி.எம்.ஓ. மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் யூடியூப் சேனல்களிலும் நேரடியாக ஒலிபரப்பப்படும். பிரதமர் மோடியின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியின் இந்தி ஒலிபரப்பிற்கு பிறகு ஏ.ஐ.ஆர்., பிராந்திய மொழிகளிலும் நிகழ்ச்சியை ஒலிபரப்புகிறது.