பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி சந்திப்பு
|ஜி20 உச்சி மாநாட்டின் ஒருபகுதியாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
புதுடெல்லி,
ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு டெல்லியில் இன்று தொடங்கியது. டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் ஜி20 உச்சிமாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்கியுள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடி துவக்க உரையாற்றி ஜி20 உச்சிமாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த உச்சி மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகள் இணைந்து பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றின.
இந்த நிலையில் இந்த ஜி20 உச்சி மாநாட்டின் ஒருபகுதியாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது வணிக உறவை வலுப்படுத்துவது, முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியாவுடன் பிரிட்டனும் இணைந்து நீடித்த வளமான உலகத்தை உருவாக்க இணைந்து செயல்படவும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "இருநாட்டு பிரதமர்களும் இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருங்கிய மற்றும் வளர்ந்து வரும் உறவுகளைப் பற்றி விவாதித்தனர். மேலும் இங்கிலாந்து-இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை வழங்குவதற்கான வேலைகள் குறித்து ஆக்கப்பூர்வமான உரையாடலை நடத்தினர்" என்று தெரிவித்துள்ளது.