பிரதமர் மோடி கூச்சமின்றி பொய் பேசுகிறார்-சித்தராமையா கடும் தாக்கு
|காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் இட ஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு கொடுப்பார்கள் என்று பிரதமர் மோடி கூச்சமின்றி பொய் பேசுவதாக முதல்-மந்திரி சித்தராமையா கடுமையாக தாக்கி பேசினார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் உப்பள்ளி-தார்வார் உள்பட 14 தொகுதிகளில் 2-வது கட்ட நாடாளுமன்ற தேர்தல் வருகிற 7-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தலைவர்களின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பிரதமர் மோடியும், முதல்-மந்திரி சித்தராமையாவும் ஒரே நாளில் பெலகாவியில் போட்டி போட்டு பிரசாரம் மேற்கொண்டு தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தனர். பெலகாவியில் நடைபெற்ற காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு பேசியதாவது:-
பிரதமர் மோடி ஒவ்வொரு முறை கர்நாடகம் வரும் போதெல்லாம் பயங்கரமான பொய்களை பேசுகிறார். முஸ்லிம்களுக்கு எதிராக பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களை தூண்டிவிட முயற்சி செய்கிறார். பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் இட ஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு கொடுப்பதாக மோடி கூச்சமின்றி பொய் பேசுகிறார்.
ஒவ்வொருவாின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக மோடி வாக்குறுதி அளித்தார். அதை நிறைவேற்றினாரா?. ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக கூறினார். இதை செய்தாரா?. வேலைகளை உருவாக்குவதற்கு பதிலாக படித்த இளைஞர்களை பக்கோடா விற்பனை செய்யுங்கள் என்று சொன்னவர் தான் மோடி" இவ்வாறு அவர் கூறினார்.