நாட்டின் மிக நீண்ட கேபிள் பாலம் சுதர்சன் சேதுவை திறந்து வைத்த பிரதமர் மோடி
|ரூ.979 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 4 வழி கொண்ட இந்த கேபிள் பாலம் 27.20 மீட்டர் அகலம் கொண்டது.
போர்பந்தர்,
குஜராத்தில் 4 வழி கொண்ட கேபிள் பாலம் ஒன்றை பிரதமர் மோடி இன்று காலை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்து உள்ளார். இந்தியாவின் மிக நீண்ட கேபிள் பாலம் என்ற பெருமையை பெற்ற இந்த பாலம் குஜராத்தின் ஓகா முதல் பெய்த் துவாரகா தீவு வரையிலான பகுதிகளை இணைக்கின்றது.
இதுபற்றிய தேவபூமி துவாரக நிர்வாகத்தின் அறிக்கையின்படி, இந்த பாலம் 2.32 கி.மீ. தொலைவை உள்ளடக்கியது. இவற்றில் 900 மீட்டர் தொலைவுக்கு கேபிளால் இருபுறமும் இணைக்கப்பட்ட பகுதி, பாலத்தின் மத்தியில் அமைய பெற்றுள்ளது.
ரூ.979 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இந்த பாலம் 27.20 மீட்டர் அகலம் கொண்டது. சிக்னேச்சர் பாலம் என்ற பெயர் கொண்ட இந்த பாலம், சுதர்சன் சேது அல்லது சுதர்சன் பாலம் என்று பெயரிடப்பட்டு உள்ளது.
ஓகா துறைமுகத்திற்கு அருகே 30 கி.மீ. தொலைவில் அமைந்த பெய்த் துவாரகா பகுதியில் பிரபல துவாரகதீஷ் கோவில் உள்ளது. கடவுள் கிருஷ்ணருக்கான இந்த கோவிலில், கேபிள் பால திறப்பு நிகழ்ச்சிக்கு பின்னர் பிரதமர் மோடி வழிபாடு மேற்கொண்டார். இதன்பின் பொது மக்கள் முன் அவர் உரையாற்ற உள்ளார்.