'பிரதமர் மோடி ஒருபோதும் பாரபட்சம் காட்டியதில்லை' - பியூஷ் கோயல்
|பிரதமர் மோடி ஒருபோதும் யாரிடமும் பாரபட்சம் காட்டியதே இல்லை என பியூஷ் கோயல் தெரிவித்தார்.
மும்பை,
பிரதமர் மோடி அனைவரின் வளர்ச்சி குறித்தும் சிந்திப்பவர் என மத்திய மந்திரியும், மும்பை வடக்கு தொகுதி பா.ஜ.க. வேட்பாளருமான பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது;-
"இஸ்லாமியர்கள் ஆபத்தில் இருப்பதாக சில அரசியல் கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ் கட்சி கூறி வருவதை சாமானிய மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை. பிரதமர் மோடி அனைவருக்கும் நன்மை செய்பவர் என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொண்டனர்.
80 கோடி மக்களுக்கு இலவச உணவு வழங்கியபோது அவர் பாரபட்சம் காட்டவில்லை. 4 கோடி மக்களுக்கு இலவச வீடு வழங்கியபோது அவர் பாரபட்சம் காட்டவில்லை. பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் மோடி அளித்த வாக்குறுதிகள் எதுவும் சாதி, இனம், மொழி, மதம் அல்லது நிறத்தின் அடிப்படையில் அறிவிக்கப்படவில்லை.
அனைத்து வீடுகளுக்கும் குடிநீர், மின்சாரம், சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கியபோதும், கிராமங்களுக்கு சாலைகளை அமைத்தபோதும் பிரதமர் மோடி பாரபட்சம் காட்டவில்லை. இதுவரை ஒருபோதும் பிரதமர் மோடி பாரபட்சம் காட்டியதே இல்லை."
இவ்வாறு பியூஷ் கோயல் தெரிவித்தார்.