< Back
தேசிய செய்திகள்
சைப்ரஸ் நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிகோசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
தேசிய செய்திகள்

சைப்ரஸ் நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிகோசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

தினத்தந்தி
|
14 Feb 2023 8:29 AM IST

சைப்ரஸ் நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிகோசுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.



புதுடெல்லி,


சைப்ரஸ் நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. சைப்ரசில் கிரேக்கம் பேச கூடிய மக்கள் அதிகம் கொண்ட தெற்கு பகுதி மற்றும் துருக்கி நாட்டினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வடக்கு பகுதி என அரை நூற்றாண்டாக பிரிவினையுடன் காணப்படும் விசயம் தேர்தலில் எதிரொலித்து உள்ளது.

இதன்படி, கிரேக்க நாட்டு ஆதரவிலான ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர், 1974-ம் ஆண்டு முதல் சைப்ரஸ் நாட்டின் வடக்கு பகுதியை துருக்கி படைகள் ஆக்கிரமித்து உள்ளன. இதனால், சைப்ரஸ் மற்றும் துருக்கி இடையே நீண்டகாலம் ஆக இந்த விவகாரம் தொடர்ந்து நிலவி வருகிறது. சைப்ரசில் விலைவாசி உயர்வு, முறையற்ற புலம்பெயர்வு ஆகியனவும் தேர்தலில் எதிரொலித்து உள்ளது.

இந்த தேர்தலில், 4.05 லட்சத்திற்கும் கூடுதலான வாக்காளர்கள் ஓட்டு போட்டனர். 72.4 சதவீதம் வாக்கு பதிவானது. தேர்தலில், 49 வயதுடைய முன்னாள் வெளியுறவு மந்திரியான நிகோஸ் கிறிஸ்டோடவுலைட்ஸ் 51.9 சதவீத வாக்குகளை பெற்று கடந்த ஞாயிற்று கிழமை வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட 66 வயது கொண்ட ஆண்டிரியாஸ் மேவ்ராய்யன்னிசுக்கு 48.1 சதவீத வாக்குகள் கிடைத்தன.

சைப்ரஸ் விரும்பிய மாற்றங்களை செய்ய முடியாததற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என தேர்தலில் தோல்வியடைந்த மேவ்ராய்யன்னிஸ் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிகோசுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்து கொண்டார்.

இதனை தொடர்ந்து சைப்ரசுக்கான இங்கிலாந்து தூதர் இர்பான் சித்தீக், நிகோசுக்கு வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். இரு நாட்டு உறவுகள் நாட்டுக்கும், எங்களது மக்களுக்கும் நீண்ட, வலிமையான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது என வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டார்.

சைப்ரசில் புதிய அதிபராக தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிகோசுக்கு பிரதமர் மோடியும் தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், சைப்ரசின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள நிகோசுக்கு வாழ்த்துகள். இந்தியா மற்றும் சைப்ரஸ் இடையேயான நட்புறவை மேம்படுத்தும் வகையில் நெருங்கி பணியாற்ற காத்திருக்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்